சிவாலயப்பணி -அன்றும்,இன்றும்,என்றென்றும்.பகுதி - 3
வானத்தை நோக்கி எறியப்பட்ட பந்து புவியீர்ப்பு விசையினால் எவ்வாறு பூமியினை
வந்தடைகிறதோ அதைப்போல , இறைவனில் இருந்து தோன்றிய ஆன்மாக்களும் பல்வேறு பிறவிகள்,
பணிகள், அனுபவங்களுக்குப் பிறகு தன் இறைத்தன்மையினைப் பெறுவார்கள் ,இறைவனை
அடைவார்கள் என்பது சுவாமிஜி விவேகானந்தரின் கூற்று.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் வாழ்ந்த மேன்மை மிகு சித்த வைத்திய
சிரோன்மணி அய்யா சுப்பிரமணியம் அவர்கள் சித்த வைத்தியத்தில் தேர்ச்சி
பெற்றிருந்ததோடு மட்டுமல்லாமல் அஷ்டாங்க யோகத்திலும் பக்குவ நிலையினை அடைந்தவராக
இருந்திருந்தார். இறைவனை தொழுவதே முதல்
தொழிலாக கொண்டிருந்தார் அந்தப் பெரியவர் .
அவரின் நிலையினை சீர்தூக்கிப் பார்க்க
அடியேனுக்கு அவ்வளவு புத்தியினை இறைவன் இன்னும் அளிக்கவில்லை.
யோக ஞானம் பெற்ற பிறகு உலக வாழ்க்கையிலும், குடும்ப பந்தத்திலும் ஞானிகள்
ஈடுபட்டாலும் அவர்களுடைய ஞானத்தால் அவை எந்த விதத்திலும் பந்தப் படுத்திக்
கொள்ளாதவாறுதான் அவர்களுடைய வாழ்க்கை அமையும். அவர்களுடைய செயல்பாடுகள் யாவும்
தம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் , தம்மை நாடி வருபவர்களுக்கும் இறைவன் அருளைப்
பெற்றளிக்கும் ஒரு ஊடகமாய் அவர்கள் அந்த வாழ்க்கையினை வாழ்ந்திருப்பார்கள்.
புகழ்மொழிகளையும் வீண்பழிகளையும் ஒரே மாதிரியாக கண்டறிவார்கள். அதில்
ஒருபோதும் மனதை லயிக்க விடமாட்டார்கள்.
தங்களை காணும் அனைவரிடமும் ஞானத்தினை அடைந்த கர்வமின்றி அவர்களின்
கர்மானுஷ்டானம் அமையும்.
இந்தப் புண்ணிய பூமியில் எத்தனையே அருளாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஊடகங்களின்
வெளிச்சத்தில் , கால ஓட்டத்தில் சிலர் வெளிப்படுகிறார்கள். சிலர்
வெளிப்படுவதில்லை. ஞானக் குறைவு என்பது இந்த பாரதத்தில் ஒருபோதும் இருந்ததில்லை .இனி அவ்வாறு இருக்கப்
போவதுமில்லை .
அந்தவகையிலே ஞானிக்குரிய இலக்கணங்கள் அனைத்தும் அய்யா சுப்ரமணியத்திற்கு
அமைந்திருந்தது. மேற்கூறியதைப் போல இல்லற பந்தத்தில் அவர்கள் இருந்தாலும் , ஒரு
நிலைக்குப் பிறகு அனைத்தையும் இறை வடிவமாக பார்க்கும் பண்பினை பெற்றிருந்தார்.
சத் புத்திரர்களைப்பெற வேண்டும். இல்லறமே நல்லறம்
என்பார்கள் சான்றோர்கள்.
அந்த வகையிலே அய்யாவிற்கும் புத்திரர்கள் இருந்தார்கள். அவர்களிலே 1940 ல் எட்டாவது மகவாகப் பிறந்தான் கண்ணன்
என்று புனைப்பெயரிட்டு அழைக்கப்பட்ட குழந்தை கிருஷ்ணன்.
கடைக்குட்டியாக பிறந்தால் இல்லத்தில் அந்தக் குழந்தையின் மீது தனி அன்பு நம்
இல்லங்களில் இருக்கும். அந்த வகையிலே அந்த அன்னை லெட்சுமிக்கும் ,தந்தை சுப்பிரமணியத்திற்கும் அவ்வாறு
இருந்தது.
ஞான வேட்கை உடைய ஆன்மாக்களை கண்டவுடன் அறிந்து கொள்வார்கள் ஞானிகள். அந்த மொட்டு அவர்களுடைய இல்லத்தில் மலர்ந்தால்
அதைப் பற்றி கேட்கவும் வேண்டுமோ.
யார் எங்கே பிறக்க வேண்டும் மற்றும் எத்தகைய பணி மேற்கொள்ளவேண்டும் என்பதை
அவர்களுடைய கர்மாக்களும், முந்தைய பிறப்பின் பிரயாசைகளும் தீர்மானிக்கின்றன. அந்த
கர்மப் பிறப்பை, அதன் காலக் கணக்கை இறைவன் மட்டுமே அறிவான்.
அந்தவகையில் ஒரு பக்தனாக , பணியாளாக இந்தக் குழந்தை என்ன மேற்கொள்ள வேண்டும்
என்பதை அய்யா அவர்கள் அறிந்திருந்தார். அதை தக்க தருணத்தில் உணர்த்தவும் முடிவு
செய்திருந்தார்.
நான்கைந்து வயதிலே , அறியாப் பருவத்தில் என்னவென்று தெரியாத அந்த விளையாட்டு
மனத்தில் அந்தக் குழந்தைக்கு ஆன்மீகப் பயிற்சிகள் அளிக்கப் பட்டது. சித்த வித்தை
அருளும் ஞானிகளின் தொடர்பு அந்த வயதிலே அவனுக்கு கிடைத்தது.
அதைப் புரிந்து
உணர்ந்து கொள்ளும் ஞானம் அந்தக் கால வாக்கில் வெளிப்படவில்லை என்றாலும் பிறகு அதை
நினைவு கூர்ந்து அதன் வழி நடக்கும் வகையில் கண்ணனுடைய மனதில் அவை ஆழப் பதிந்தது .
துறவிகளிடமும், சான்றோர்களிடமும் ஒட்டிக் கொள்ளும் வகையில் தந்தையைக்
காட்டிலும் அன்பு செலுத்தும் வகையில் அந்தச் சிறுவயதிலே கண்ணனுக்கு நல்ல அறிமுகம்
தந்தையின் மூலமாக கிடைத்தது.
அது இருக்கட்டும் சத்குரு பதஞ்சலியின் அறிமுகம் அந்தப் பிறவியில்
எப்போது ?
தொடர்வோம் அடுத்த பதிவில்.
வரலாறு தொடரும்.
சிவ.உதயகுமார்
இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,
ReplyDeleteதங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_856.html
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_856.html) சென்று பார்க்கவும்...
நன்றி...