Thursday, June 23, 2016

பஞ்ச கோசங்கள் - ஓர் அற்புத விளக்கம்



உணவுடம்பு காற்று அல்லது பிராண உடம்பு ,மன உடம்பு ,அறிவு உடம்பு ,இன்ப உடம்பு என்று முறையே அவை அழைக்கப்படும். 






யோகா


இவற்றின் வட சொற்களில்



அன்னமய கோசம்


பிராணமய கோசம்


மனோன்மய கோசம்


விஞ்ஞானமய கோசம்


ஆனந்தமய கோசம் என்று அழைக்கப்படுகின்றது. 




ஒவ்வொரு கோசமும் நமக்கு ஒவ்வொரு உறைகள் போல அமைந்திருக்கிறது. 

ஒரு தலையணைக்கு உறை இருப்பது போல இந்த உடம்பிற்கு ஐந்து உறைகள் மேற்சொன்னவாறு உள்ளன. ஆகவே இந்த பஞ்ச கோசத்தின் இயல்புகள் என்னவென்று பார்க்கின்றபோது முதலில் சொன்ன அந்த ஏழு தாதுக்களால் உருவாகின்றது அன்னமய கோசம். அன்ன சாரத்தினால் அதாவது அன்னம் என்று நாம் இங்கே குறிப்பிடுவது நாம் சாப்பிடக்கூடிய உணவில் இருந்து கிடைக்கும் சாரம். 


அரிட்டாபட்டி




பிராணனும். பலமும் அடங்கியிருப்பது பிராணமய கோசம். 

அந்த பிராண பலத்தினால் வந்து தோன்றியிருப்பது மனோன்மய கோசம்.



மனதில் அந்த வித்தை என்ற விஞ்ஞானத்தினால் தோன்றுவது தான் விஞ்ஞான மய கோசம்.



அந்த விஞ்ஞானத்தினால் தோன்றியிருப்பது தான் ஆனந்த மய கோசம்.


 ஐந்து கோசங்களும் ஒன்றிலிருந்து ஒன்று மற்றும் ஒன்றை ஒன்று எனத் தழுவியிருக்கின்றது.

இன்னும் சுருக்கமாகக் கூறப்போனால் 

உணவுடலை மூச்சு உடல் இயக்குகிறது. 

மூச்சு உடலை உணர்வு உடல் இயக்குகிறது. 

உணர்வு உடலை அறிவு உடல் இயக்குகிறது. 

அறிவு உடலை அதற்கு மேலிருக்கின்ற இம்மை இன்ப உடல் இயக்குகிறது. 

இம்மை இன்ப உடலை அதற்கு மேலிருக்கின்ற மறுமை இன்ப உடல் இயக்குகின்றது. 

மறுமை இன்ப உடலை அதற்கு மேலிருக்கின்ற பேரின்ப உடல் இயக்குகிறது. 




அந்த பேரின்ப உடல் எல்லா உடலையும் இயக்குகின்ற திருவருள். அதுதான் எல்லா உயிர்களையும் இயக்குகின்ற அருள் வடிவாகும்.




அன்னமய கோசம்




தாய் தந்தை அருந்தும் உணவாதிகளால் ஆண் பெண் இன்ப உறவுகளினால். இன்ப உணர்வுச் சுரப்பிகளான சுக்கில மற்றும் சுரோணித என்ற வெண்ணீர் கலப்பினால் அதன் காரணமாகத் தாயின் உதிரத்தில் உயிர்தரித்து விதை மண்ணிலே இடப்படுவது போல தாயின் கர்ப்பமானது உயிர்தரிக்கின்ற நிலமாக அதற்கு உள்ளது. அக்குழந்தைக்கு உணவாதிகள் அன்னம். பால் போன்றவற்றை அளித்து நாள்தோறும் அதன் மூலம் தூலம் வளர்கின்றது. 

அதற்கு 16 கலைகள் உள்ளது. அது வேறு விஷயம் தூல சரீர மாறுபாடுகளை ஒவ்வொரு வினாடியும் அந்தக் குழந்தை அடைந்து விடுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் நலிதல், நசித்தல் போன்ற விகாரங்களுக்கு ஏற்ப சப்த தாதுமயமாகிறது. அவை முன்னால் சொல்லப் பட்டுள்ளன. 



அதுவே அன்னமயகோசம் என்று அழைக்கப் படுகின்றது. இச்சரீரம் அதனுடைய பாண்டம். அதன் கலம் முடிவு என்ற மரணத்தை பெற்றது. அதன் முடிவு பூமி என்ற பிருத்வியில் ஒடுங்குகிறது. இவ்வாறு அன்னமய கோசம் மண்ணிலே ஒடுங்குகின்றது. 





பிராணமய கோசம்




அடுத்து பிராணமய கோசம் என்ற காற்றுடம்பு அல்லது வளி உடம்பு. அவ்வாறு சொல்கின்ற அந்த வளி உடம்பு, வாக்கு, கைகால்கள் ,பாயு என்ற குதம் மலவாய் உபஸ்தம் என்ற கருவாய் எனப்படும் பஞ்சேந்திரியங்களை உடையதாகும். 



பஞ்சவாயுக்களான பிராணண், அபானன், சமானன், உதானன், வியானன் என்பவைகளும் அதோடு நாகன், கிருகரன், கூர்மன், தனஞ்செயன், தேவதத்தன்  என்ற ஐந்து உப வாயுக்களும் கூடி இந்த அன்னமய கோசத்திலே உலவுகின்றபோது பிராணமய கோசமாகி, இறைச் சேர்க்கைகளாகி, பரமாத்மாவின் உள்ள  சத்,சித், ஆனந்தம் என்ற குண இயல்புகளின் காரணமாகி மனிதன் பிராணண் உடையவனாகின்றான். அத்துடன் இருவகை நான்-ஐ அது கொள்கிறது. இந்த இரு வகை நான் என்பதை பற்றிய ஒரு தொகுப்பினை திருமூலர் அவர்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். 


                       அவரே ஒரு நானாக இருந்து வேறொரு நானாக மாறியவர் தான். ஆகவே ஒரு வகை நான் என்பது பசி,சாமர்த்தியம், பலம் ஆசை, வீரம், தீரம் கொண்டவனாகியும் இரண்டாவது வகை நான் என்பது வாயாடி, ஊமை, குருடன், முடவன் போன்றவை உடையவனாகவும் கொண்டு அவை பிராணமய கோசத்தின் குணங்களாகின்றன. இக்குணங்கள் மனிதனுடைய உடலில் நக சிக பரியந்தம் என்ற உச்சி முதல் உள்ளங்கால் வரை எங்கும் அந்தரங்கமாய் வியாபித்து (வெளியிலே தெரியாமல்) கண். காது. மூக்கு முதலான இந்திரியங்களுக்கு அவை பலத்தை அளிக்கிறது. நல்ல அல்லது தீய என்ற இருவழிகளில் அவனை நடத்துகின்றது.







மனோன்மய கோசம்




இந்த உடல், மனம் சார்ந்த பஞ்சேந்திரியங்களும் சேர்ந்து அச்சேர்க்கையால் சப்தம், விஷயம், தீர்மானித்தல். விருப்பு, முனைப்பு என்ற ஆகாச தத்துவ ஓசைகளைக் கேட்டும் மனோன்மய கோசமாகின்றது. இந்த மனோன்மய கோசம் ஆன்மாவுடன் சேர்க்கையினை உண்டு செய்கிறது. 

                 பிராணமய கோசத்திற்கு வேறாக இருந்து கொண்டு இருப்பதால் காமம், குரோதம், நான், எனது என்ற விகாரங்களை உடையதாக இருக்கின்றது. மனதிற்கும், பிராணனிற்கும் பெரிய தொடர்பு  ஒன்றுமில்லை. ஆனால் பிராணனை நன்றாகப் புரிந்து கொண்டால் மனம் நன்றாக இருக்கும்.



 

விஞ்ஞானமய கோசம் என்ற அறிவுடம்பு




புத்தி, ஐம்பொறிகளுடன் சேர்ந்து அந்த அன்னமய, பிராணமய, மனோன்மய கோசங்களின் கூட்டு கொண்டு அகக்கருவிகளான அந்தக்கரணங்கள் என்ற மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவைகளின் விருத்திகள் ஏற்படும் சமயம் அது விஞ்ஞான மய கோசமாகிறது.

புலன்களிலேயே கண்களின் செயல்பாடு மிகவும் ஆழமானது. வேகமானது. விருத்திகளை அதிகமாக உடையது. ஒரு காட்சியைப் பார்த்தவுடன் அது படம் பிடித்து விடுகின்றது. அவை நினைவுகளில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.  இதை கட்புலன் என்றும் கூறுவார்கள். மற்ற புலன்களை எல்லாம் விட இந்தக் கண்ணால் அதிக விஷயங்களை கிரகிக்க முடியும். 


கேட்பது, பேசுவது என்பதை விடப் பார்ப்பது என்பது எவ்வளவு அழகானது.!!!!!!!!!!!!!!!!





இறைவனின் காட்சி, குருநாதர் காட்சி, அழகிய இயற்கைக் காட்சி இவற்றை எல்லாம் இந்தக் கண்ணிண் வழியாகக் பதிந்து மூளைக்கு உணர்த்துகின்றது.

                                                   அகக்கண் என்பது  வேறு. ஏற்கனவே பார்த்த காட்சிகள் என்றால் மூளையில் நினைவுபடுத்தி சித்தத்தில் அது தொடர்பான சம்ஸ்காரங் களை நினைவுபடுத்தி இவனை ரசிக்க, நினைக்க வைக்கிறது. அது தொடர்பான நினைவலைகளை இவனுள்ளே ஏற்படுத்துகிறது.தேவைப்படும்போது ஐம்பொறிகளுடன் இந்த விஞ்ஞான உடம்பு கூட்டுச் சேர்ந்து அந்த கோசங்களைப் பயன்படுத்தி செயல்படுகின்றது. எவ்வாறாயினும் ஒரு விஷயத்தை அறிந்து விட அது முனைப்பு காட்டுகிறது. காட்சியாக இருந்தாலும்;. ஓலியாக இருந்தாலும், வாசனையாக இருந்தாலும்; எப்படியாவது அறிந்து விட முனைப்பு காட்டுகின்றது. 



 நான் பக்தன், நான் புத்தியுடையவன், நான் செயல் வீரன் என்ற குண இயல்புகள்  எல்லாம் இந்த கோசத்தின் அடிப்படை,  சிறந்தவை எல்லாம் என்னில் உள்ளது என்று தனக்குத் தானே எண்ணிக்கொண்டு செயல்படும் பாங்கும் உடையது.





ஆனந்தமய கோசம்





அடுத்தபடியாக ஆனந்தமய கோசம் என்கின்ற அந்த இன்ப உடம்பு. மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேல், கீழ் என எல்லா இடத்திலும் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது என்று சொன்னால் ஆனந்தமய கோசம் அதை அப்படியே ஈர்த்து விடும். இந்த இடத்தில்தான் என்றில்லாமல் இன்பத்தின் வாசனையினை நுகர்ந்தால் கூட அதை அனுபவிக்கத் துவங்கும். எந்த வகையான இன்பம் என்று அதற்கு தெரிவிக்கப்பட்டதை நமக்கு உணர்த்தி நம்மில் செயல்பட வைக்கிறது.



நினைவுகளோடு கூடிய இன்பத்தை இவன் புரிந்து கொண்டு மற்ற புலன் அடிப்படைகளில் எது ஒன்று குறைவாகினும் அந்த மகிழ்ச்சியினை அந்தரங்கமாய் இவன் நினைத்தாலே போதும். அவன் ஆனந்தம் அடைந்து விடுவான். மேற்சொன்ன நான்கு கோசங்களும் அறியாமை, அஞ்ஞானத்துடன் இணைந்த நுட்பமான, அதாவது ஒரு ஆல விதைக்குள் மிகப்பெரிய மரம் அடங்கியிருப்பதைப் போல கால, ஞான, பரிமாண சுகத்திலே திளைப்பதே ஆனந்த மய கோசம் ஆகும்.



பிரம்மாண்டமான மரத்தின் பரிமாணம் அதன் விதையில் வளர்ச்சியாய் அடங்கியிருப்பதைப் போல, இன்பமானது சிறிய பரிமாணத்தில் அடங்கியிருந்தாலும் அதில் ஆனந்தம் அடைந்து திளைத்துவிடுவது. அனேக சுகங்களைக் கொண்டு பெருகி விடுகிறது ஆனந்தமய கோசம்.

ஆனந்தம் என்று சொன்னவுடன் ஆசையினால் வந்த ஆனந்தம் வேறு, பிரியத்தினால் வந்த ஆனந்தம் வேறு. ஆசை என்று சொன்னவுடனே அது நிறைவேறாதவரை அந்த எண்ணம் சித்தம் என்ற ஆழ்மனதை விட்டு நீங்காது. அமைதியுறாது. 



  பிரியம் என்பது எண்ணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஆசையுடன் உறவு கொள்ளாதது. இது அஞ்ஞானத்தினின்றும் விடுபட்டு ஞானக்கலப்புக் கொண்டது தான் பிரியம். இறைவன் மேல் வைத்திருப்பதே உன்னதமான பிரியம். பிரியமானது மோதம் என்றும் பிரமோதம் என்றும் அழைக்கப் படுகின்றது. பொருளோ அல்லது விஷயமோ அதைக் கண்டதும் உண்டாவது ஆனந்தம். மோதம் என்பது விருப்பமானது கிட்டியவுடன் உண்டாகக்கூடிய ஆனந்தம். பிரமோதம் என்பது தனக்குக் கிட்டியதை அனுபவித்து அடைந்த, உணர்ந்த அனுபவம் ஆகும்.






 ஆத்மா சத்சித் ஆனந்தத்துடன் சேர்க்கைக் கொள்வதால் ஆனந்தம் தோன்றுகிறது. ஆகவே ஆனந்தமய கோசம் பராமத்மா அம்சத்துடன் சேர்க்கை பெறுகிறது. பேரானந்தத்தை அனுபவிக்ககூடிய தன்மை ஆனந்தமய கோசத்தில் உள்ளது. மற்ற கோசங்களில் அவை இல்லை. 



நம் அனைவருக்கும் அந்த ஐந்து கோசங்களே உள்ளன. அந்த கோசங்களில் தேவையானவற்றை இட்டு விட்டால் அந்த தகுதி அதற்கு வந்து விடும். இதன் நிகழ்வு தானாக நிகழ்கிறது. 



பருப்பொருட்களில் இருந்து செயல்பாடு துவங்கி பஞ்சகோசம் வரை பலப்பல செயல்பாடுகள் நிகழ்கிறது. தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு செயல்பாடுகளும் இச்சை அனிச்சை செயல்களுக்கு ஏற்றதாக இருக்கும். 


மனிதனுடைய பஞ்ச கோச நிறைவுகளின்படி அந்தந்த மனிதர்களின் மனம் இருக்கும். அந்த அளவு எவ்வாறு இவனுக்கு இருக்கும், இவனுக்கு உடல் எப்படி இருக்கும், அறிவு எப்படி இருக்கும், என்றால் கடந்த பிறவியினுடைய அமைப்பு அவனைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது. பூர்வ புண்ணியங்களிற்கு ஏற்ப அந்தப் பஞ்ச கோசங்களில் நிறைவோ அல்லது குறைவோ பெற்றிருக்கிறோம். 


பஞ்ச கோசங்களின் செயல்பாட்டை மாற்றியமைக்கும் அளவு நமது புத்தி வேலை செய்கிறது. ஆனந்த மய கோசத்தை விட மனிதன் தன் புத்தியின் மூலம் ஆனந்தம் இல்லாமல் செய்ய முடியும். 



இறைவன் மற்றும் பேரானந்தம் என்ற எண்ணம் இல்லாவிட்டால், அது செயல்படாவிட்டாலும்   அவனால் எதையும் நினைக்க இயலாமல் போகிறது. பிராண மயம், மனோன்மயம், விஞ்ஞான மயம் என்ற மூன்று கோசங்களினாலும் சூட்சம நுண்ணுடல் நிலைத்து நிற்கிறது. சூட்சம உடல் என்பது இந்த மூன்று கோசங்களிற்குள்ளும் நிறைந்து நிற்கிறது.




மூன்று கோசங்களையும் நாம் சரியாகப் பேணுவதற்காக அவற்றை நாம் நம் வசப்படுத்த வேண்டும். அதைப் பயன்படுத்த வேண்டும். பயிற்சி அளிக்க வேண்டும். இப்பிறவியிலயே அதைச் செய்து விட்டோம்; என்றால் நமக்கு சூட்சமம் என்பது விளங்கி விடும்.



  ஒரு மனிதன் செய்கின்ற வினைகளின் பதிவு சூட்சம உடலில் தங்கி விடுகிறது. அடுத்த பிறவியிலும் அவனைத் தொடர்கிறது. இப்பிறவியிலயே பக்குவ நிலைக்குச் செல்ல முயற்சி செய்தால் சூட்சம உடலில் நமக்கு அனைத்து அவயவங்களும் செயல்படும். ஆனால் நம்மைத் தவிர வேறு யாருக்கும் வெளியே தெரியாது. 

ஆனந்தமய கோசத்துடன் பரமாத்வுடன் சேர்க்கை ஏற்படக் கூடிய நிலையினை அந்தக் கோசம் கொண்டுள்ளது. 



  அடுத்தபடியாக திரிகுணங்கள் என்று சொல்லப் படுகின்ற மனவெழுச்சி. மயக்கம். அமைதி என்று சொல்லக் கூடிய ராஜஸம், தாமசம், சத்வம் என்ற முக்குணங்களைப் பற்றிப் பார்ப்போம்.




2 comments:

  1. ந. மாசிலாமணிFebruary 15, 2021 at 10:12 PM

    மிக அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment