ஞாயிறைப் போற்றுவோம், நலம் காண்போம் - 9
மீண்டும் ஒரு கட்டுரையில் பதிவுலக ஆன்மீக உறவுகளை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. யோகத்தை முதன்மையாக கொண்ட இந்த வலைப்பூவில் அது தொடர்பான கட்டுரைகள் மட்டுமே தொடர்ந்து வெளியிட வேண்டும் என்ற நோக்கில் அடிப்படை விஷயங்களில் இருந்து அறிவுபூர்வமாக உணரும் வகையில் ஒவ்வொரு தலைப்பினிலும் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் கட்டளைப்படி எங்களால் முடிந்த அளவு இங்கே தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறோம். அதை ஓரளவு சரியாக செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் சரியாக செய்ய வேண்டும் என்று உணர்கிறோம்.
தங்கள் வாழ்க்கையின் அத்தியாயத்தில் இன்னும் ஒரு புதிய ஆண்டை எதிர்நோக்கியிருக்கும் ஆன்மீக உறவுகளுக்கு ஸ்வார்த்தம் சங்கத்தின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .இந்த பதிவில் சூரிய பகவானை போற்றும் துதிகள் (51 -65 ) ஐ காண்போம்.
நூறு வேள்விகளில் எழும் ஜ்வாலைக்கு ஒப்பான ஜ்வாலையுள்ள ஸவிதா , எமது துதிகளால் போற்றப்பட்டு மகிழ்ந்து , பகைவர்கள் எம்மை நோக்கிச் செலுத்தும் படைகளில் இருந்து எம்மை ரட்சிக்கட்டும்.
ஸவித்ரு என்றழைக்கப்படும் சூரியன் எங்களுக்கு நல்ல பார்வை நல்கட்டும். பர்வதன் என்றழைக்கப்படும் சூரியன் எங்களுக்கு நல்ல கண்களை நல்கட்டும். ததா என்றழைக்கப்படும் சூரியன் எங்களுக்கு நல்ல த்ருஷ்டியை நல்கட்டும்.
சூரியனே ! எங்கள் கண்களுக்கு தீர்க்க த்ருஷ்டி அருள்வாயாக . எங்கள் உடல் அதனால் பொலிவுறட்டும் . நாங்கள் இந்த உலகை உள்ளபடி அறிந்து கண்டு உணர்ந்து வாழ இயலட்டும்.
சூரியனே ! எங்கள் அனைவரையும் ப்ராகசத்தோடு நீ பார்க்கிறாய்.
உன்னை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க அருள்வாயாக.
மற்றனைவராலும் காணக்கூடியவற்றை நாங்களும் கண்டு கொண்டிருக்க அருள்வாயாக.
காற்றினால் உந்தித் தள்ளப்பட்டு உலகைச் சுற்றி வந்து, தன் மக்களைத் தானே முன் வந்து காத்து, அவர்களுக்குச் செல்வங்கள் ஈந்து சுகப்படுத்தி, எல்லா இடங்களிலும் ப்ராகசித்துக் கொண்டிருக்கும் ஆதவன், இந்த வேள்விக்கும் எழுந்தருளி, ஸோமரஸம் ஏற்று, யஜமானனுக்குத் தடைகள் வாரா தரமான நீண்ட ஆயுள் வழங்குவானாக.
அதோ பாருங்கள் ஆதவன் எழுகின்றான் ! அவன் ப்ரகாசம் மிக்கவன். மகிமைகள் வாய்ந்தவன். வளங்கள் செறிந்தவன்;
நல்ல உணவுச் செல்வங்களை நிறைய வழங்குபவன்;
தர்மத்தையும் நியதியையும் உறுதிப் படுத்தும் ருதமும் ஸத்யமும் தாங்கி நிற்கும் ஜ்யோதிர்லோகத்தில் உள்ளவன்;
அநீதிமான்களையும் அசுரர்களையும் அழிப்பவன்.
ஜ்யோதிகளிலே மிகச் சிறந்ததான சூரிய ஜ்யோதி, இந்த விச்வத்தையும் (அண்டசராசரங்களையும் ) , அனைத்துச் செல்வங்களையும் வெல்ல வல்லது.(அவற்றிற்கெல்லாம் மேம்பட்டது) எனப் போற்றப் படுகிறது.
அந்த ஜ்யோதியின் சிறந்த் பலத்தையும், அழியாத காந்தியையும், அனைவருக்கும் புலப் படுத்துவதற்காக ஆதவன் அனுதினமும் எழுந்தருள்கிறான்.
சூரியனே ! உலகுக்கெல்லாம் ஒளியூட்டிவிட்டு, வானுலகத் தேவர்களைச் சென்றடைந்த நீ, விச்வேதேவர்களால் இந்த விச்வத்தின் செயல்கள் அனைத்தையும் இயக்கி, அனைவரையும் போஷிக்கிறாய்.
(சூரியன் என்ற ) பல வண்ணப் பசு, இங்கே வந்து தன் (பூமி என்ற ) தாய்க்கு முன் அமர்ந்தது.
அது (ஜோதி என்ற ) தன் தந்தையினை நோக்கி (வானில்) முன்னேறி நகர்கின்றது.
அது ஒருவனின் மூச்சுக் காற்றைக் கவர்ந்து சென்றால் அவன் காலமானவனாகின்றான். மகிஷத்தைப் போல் அது காட்சியளிக்கிறது.
(வானில் நகரும் பறவை போன்ற ) அதன் பாதை இரவு - பகலாக முப்பது நிலைகளோடு ப்ராசித்துத் துதிகளால் போற்றப் படுகிறது.
ருதமும், ஸத்யமும் கடுமையான தவத்திலிருந்து தோன்றின.
பின்னர் இரவு தோன்றிற்று. பின்னர் ப்ரளயமென ஜலத்தைத் தாங்கிய வண்ணம் ஸமுத்திரம் தோன்றியது.
நீர் நிறைந்த அந்த சமுத்திரத்திலிருந்து ஸம்வத்ஸரம் (வருஷம், ஆண்டு) என்ற காலச் சக்கரம் உண்டானது.
அந்தக் கால தேவன் இரவையும் பகலையும் தோற்றுவித்து, அதன் ஒவ்வொரு விநாடியையும் தன் இமைக்குள் அடக்கி வசப்படுத்தி ஆளத் துவங்கினான்.
ச்ருஷ்டி கர்த்தாவான தாத்ரு பின்னர் சூரியன், சந்திரன், வானம், பூமி, காற்று, ஓளி என்று அனைத்தையும் கல்பித்தான்.
மேற்கிலிருந்து ஸவிதா கிழக்கிலிருந்து ஸவிதா, வடக்கிலிருந்து ஸவிதா, தெற்கிலிருந்து ஸவிதா ! நாற்றிசையிளிருந்தும் ஸவிதா ! ஸவிதா என்ற சூரிய பகவான் எங்களுக்குச் செல்வங்களை வாரி வழங்கட்டும். எங்களுக்கு தீர்க்காயுளை வழங்கட்டும்.
வணக்கங்களும், வாழ்த்துக்களும் தொடரும்
No comments:
Post a Comment