Thursday, December 30, 2010

ரிக் வேதத்தில் சூரிய நமஸ்காரம் (41-50)

 ஞாயிறைப் போற்றுவோம்.  நலம் காண்போம்   - 8

ரிக் வேதத்தில் சூரிய பகவானைப் பற்றி போற்றி வணங்கும் துதிகளை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். வேத காலத்திலே சூரிய வழிபாடு எந்தளவுக்கு சிறப்பு பெற்றிருந்தது என்பதற்கு இந்த துதிகளே சாட்சி .அதுமட்டுமல்லாமல் ஓளி தருகின்ற இறைவனாக 
போற்றப்படுகின்ற சூரிய பகவான் உள்ளொளி பெருக்கவும் இங்கே வேண்டப் படுகிறார்.  மிகவும் பழமை வாய்ந்த இந்த ரிக் வேதத்தில் இருந்து யோக நெறிக்கு வலுவான துணையாக உள்ள இந்த துதிகள் எந்த ஒரு வேறுபாடுமின்றி அனைவராலும் படிக்கப்படவேண்டும் மற்றும் அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதே ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் நோக்கம்.  சென்ற பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவிலும் துதிகளை பார்ப்போம்.

 சூரியனே  ! நீ எந்த ஜோதியால் இருளை விரட்டுகிறாயோ , எந்தக் காந்தியால் (கவர்ச்சியால், அழகால், ஈர்க்கும் சக்தியால்) அசையும் பொருட்களை எல்லாம் அசைய வைக்கின்றாயோ, அந்த ஜோதியால் , அந்த காந்தியால், எமது பணிவின்மை என்ற கேட்ட குணத்தை களைந்து விடு. தீய கனவுகளை நீக்கி விடு 



 கோபம் அற்ற குணவானாம் கதிரவனே ! உன்னை வேண்டி அழைத்தால் , ஸ்வதாவுக்கு பின்னே வந்து ஒவ்வொருவரின் விரதத்தையும் பாலிக்கிறாய். உன்னை நாங்கள் அழைப்பதன் நோக்கத்தை தேவர்கள் புரிந்து கொள்ளட்டும். 


ஸ்வர்க்க லோகமும், பூலோகமும், இந்திரனும், மருத்கணங்களும் எங்களது இந்த ஸ்தோத்திரத்தை கேட்கட்டும். சூரியனைப் பார்ப்பவர்கள் துக்கமில்லாமல் இருக்கட்டும். நாங்கள் மங்கலமானவர்களுடன் நெடுங்காலம் வாழ்ந்து பின் மூப்பெய்துவோமாக.


நாங்கள் நல்ல மனமுள்ளவர்கள் ; நல்ல பார்வையுள்ளவர்கள் ; நல்ல மக்களுள்ளவர்கள் ; நோயற்றவர்கள்;  பாவங்களிழைக்காதவர்கள் ; நண்பர்களைக் காத்த வண்ணம் தினந்தோறும் தவறாது எழும் உன்னை நாள்தொறும் போற்றி வருபவர்கள். நீ பன்னெடுங்காலம் வானில் செல்வதைக் கண்டுகொண்டு நாங்கள் வாழ அருள்வாயாக .


சூரிய பகவானே ! (பக: என்பது சிறந்த செல்வங்களைக் குறிக்கும். பேராண்மை, வீர்யம், புகழ் , செல்வம், அறிவு, பேரறிவு , அதாவது ஞானம் - இந்த ஆறும் கொண்டவன் பகவான் எனப்படுவான். ) அனைத்தையும் காண்பவனே ! ஜோதி கொண்டு பிரகாசிப்பவனே ! அனைவரின் கண்களுக்கும் களிப்பூட்டுபவனே ! பரந்த விரிந்த வலிமை மிக்க கடலின் மீது உதயமாகின்றவனே !  நீடூழி வாழ்ந்திருந்து உனைக்காணும் அருள் செய்வாயாக.


பொன்னென ஒளிரும் கேசமுள்ள கதிரவனே ! உன் ஒளியால்தான் பகலில் எல்லா ஜீவராசிகளும் அசைகின்றன. இரவில் அவை இளைப்பாறுகின்றன.  எங்கள் பாவங்களைக் களைந்து சுகப் படுத்தும் முகத்தான் தினமும் காலையில் எம்மிடம் வருவாயாக.



ஆதவனே ! உன் ஓளி எங்களுக்கு இதமளிக்கட்டும். உன் பகல் ஓளி இதமளிக்கட்டும் . உன் இரவுத்தன்மை இதமளிக்கட்டும் . உன் வெப்பம் எங்களுக்கு இதமளிக்கட்டும். சூரியனே ! நாங்கள் செல்லும் மார்க்கங்களிலும் , எங்கள் மனைகளிலும் பல்வகைச் செல்வங்கள் ஈந்து எங்களுக்கு இதமருள்வாயாக



எங்களது இருவகைப் பிராணிகளுக்கும், இருகால் நாற்கால் பிராணிகளுக்கும்,  புஷ்டியான உணவும், பானமும் அளித்து ரக்ஷிப்பாயாக.  நாங்கள் சுகமாக, இன்பமாக, பாவங்களைச் செய்யாமல் வாழ அருள்வாயாக.



மனத் தடுமாற்றத்தால், மதியின்மையால், வளைந்த நாக்கின் வரம்பின்மையால்  நாங்கள் பாவங்கள் செய்து தேவர்களின் சீற்றத்திற்கு இலக்காகியிருக்ககூடும்.  எம்மை மன்னித்து அந்த சீற்றத்தை எம்மை அச்சுறுத்தும் பகைவர் பக்கம் திருப்பிவிடுவாயாக.


 சொர்க்கம், காற்று, ஆகாயம், அக்நி, பூமியில் இருக்கும் பகைவர்கள் ஆகியோரிடமிருந்து எங்களை சூரியபகவான் காப்பாற்றுவாராக. 

வாழ்த்துதலும், வணக்கங்களும் தொடரும் 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment