Thursday, August 25, 2022

துவங்குவதற்கு முன்பாக ...............

    அன்புள்ள ஆன்மீக வலைப்பதிவு வாசகர்களுக்கு அவரவர்கள் வயதுக்கு ஏற்றபடி அடியேனின் ஆன்ம வணக்கங்கள்..


    பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு பொருளுரைப்பது என்பது குருவின் வழியில் சத்குருவின் அருளால் சாத்தியமே அன்றி சாதாரண மனித முயற்சியால் அது முடியாது..

                                                          




                         ஏனென்றால் தவஞானத்தில் கரை கண்ட ரிஷிகள் மகான்கள் முனிவர்கள் சித்தர்கள் பலரும் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு விளக்கம் அளித்துள்ளனர்..

                                 அந்த வரிசையில் அதற்கான தகுதியை கூட இந்த ஆத்மா பெற்றிருக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் ஒப்புக் கொள்வது சுய பரிசோதனை..

                                   இருந்த போதும் வேரில் இருந்து வருபவர்கள் மொழிப் புலமை இல்லாதவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளும்போது அவர்கள் மூலமாக அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கும் பாமரர்களுக்கும் அந்த பதஞ்சலி யோக சூத்திரத்தின் அருமையை எளிதில் விளக்க முடியும் என்பது எங்களுடைய தாழ்மையான கருத்து..

                                                   ஏனென்றால் யோக ஆச்சாரியார் குருஜியின் டி எஸ் கிருஷ்ணன் அவர்கள் அந்த வழியிலே எங்களுக்கு எளிதாக புரியும் படி அந்த பதஞ்சலி யோக சூத்திரத்தை பல ஆண்டு காலம் வகுப்புகளாக கற்பித்தார்..


                      அந்த சூத்திரத்தின் அர்த்தங்கள் ஒவ்வொன்றும் மனதில் நிலை நிறுத்தும் வகையில் பல உப நூல்களை, உதாரணங்களுக்காக  சாஸ்திரங்களை அவர் கையாண்டார்..


                             அதிலே ரமணரின் உந்தீ பற, அவ்வை மாமுனி இயற்றிய அவ்வைக்குறள்,   உபநிஷதங்கள் பகவத் கீதை, சித்தர் பாடல்கள், திருமந்திரம் இன்னும் இன்னும் பல ஆன்மீக  நூல்கள் அதில் அடங்கும்... 

                                                       சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி தொகுத்த சூத்திரங்கள் அனைத்தும் அதிகபட்சம் ஒரு வரி அல்லது இரண்டு வரியில் அடங்கிவிடும்...
ஆனால் அவற்றிற்கு கூற வரும் அர்த்தம் என்பது அவரவர் இயல்பு அவரவர் தவநிலை மற்றும்  அவரவர் புரிந்துணர்தல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்...

                            தற்கால ஞானிகள் என்று அழைக்கப்பட்ட ஓஷோ ,சுவாமி  போன்ற இன்னும் பலர் பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர்...

                                              அன்பு குருநாதரின் திருவடியில் கீழ் அமர்ந்து பெற்ற ஞான விளக்கங்களுடன் எளிமையான புரிதலுடன் அந்த புரிதலை வாசகக் கண்மனிகளாகிய உங்களுக்கும் பகிர்ந்து கொள்ள முயன்றவரை முயற்சிக்கிறோம்..இதில் பிழைகள் ஏதும் ஏற்படுமாயின் பதிவு செய்யும் எங்களையே சாரும்...

                                         இதில் உள்ள அனுபவ சாத்தியமான சத்திய உண்மைகள் எல்லாம் இவற்றிற்கு விளக்கம் தந்து இந்த நிலையை எல்லாம் அனுபவித்து உணர்ந்த குருமார்களையே சாரும் அந்தப் பெருமை...

                                                     ஆக வரும் பதிவில் ஒவ்வொரு சூத்திரத்திற்கும் யோக ஆச்சாரியார் யோக தர்ஸன் (என்ற )யோக தரிசனம் என்ற நூலில் இயற்றிய விளக்க உரையை பதிவிட்டு பிறகு புரிந்துணர்தல் என்ற தலைப்பின் கீழ் எளிய தமிழில் பதிவிடலாம் என்று உத்தேசித்து இருக்கின்றோம்..


                    உளவியல் சிக்கல்கள் ஒவ்வொரு தனி மனிதருக்கும் அதிகரிக்கும் இந்த காலகட்டத்திலே, பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற உன்னதமான சாஸ்திரங்கள் மனித புரிதலுக்கு உட்பட்டு அவர்களுடைய வாழ்வில் மனமாற்றத்தை ஏற்படுத்தி ஒரு மன அமைதியை அவர்களுக்கு பெற்று தரும் வகையில் இந்த தொடர் என்பது ஒரு தூண்டுகோலாக அமைந்தால் அதைவிட வெற்றி என்பது இதற்கு மேல் வேறு எதுவும் இல்லை...


 

                                    என்றும் அன்புடன்
சிவ .உதயகுமார்
மு. கமலக்கண்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment