Wednesday, February 2, 2022

ஆன்மீக(தியானம் ) வாழ்வில் பிரார்த்தனையின் முக்கியத்துவம் - TSK

                 உலகம், நாம், கடவுள் இந்த மூன்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது இந்த மூன்றையும் அறிவதற்காகத் தான் நாம் யோகம் பயில்கின்றோம். ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றோம்.

 


                     பதஞ்சலியின் யோக சூத்திரமானது இவற்றையெல்லாம் நமக்கு உணர்த்துகிறது. இவற்றை அறிவதற்காகத் தான் எத்தனையோ பல நூல்களையும் அருளாளர்களின் வழிகளையும் நாம் பின்பற்றி வருகிறோம் இவையெல்லாம் நம்மை பண்படுத்துவதற்கான வழிகளே ஆகும்.

                             நாம் நம்மை பண்படுத்திக் கொள்ள முயற்சித்தாலும் கூட அது விதியின் கையில் சிக்கிக் கொண்டு விதியானது நம்மை பல செயல்களை செய்ய வைக்கின்றது ஆனாலும் அந்த விதியின் காலம் முடிந்தபின் நம்முடைய முயற்சிக்குரிய  பலன் நமக்குக் கிடைத்துவிடும்.

 

                  மனிதனுக்கு சில கோள்களின் செயல்பாடுகளால் துன்பம், நோய், மனக்கிலேசங்கள் ,அவமானங்கள் இவையெல்லாம் ஏற்படுகின்றன

 

                         ஆனால் அந்தக் கோள்களின் நிலை மாறுகிறபோது வந்த அத்தனையும் நம்மை விட்டு நீங்கிவிடும் ஞானவழியில் ஈடுபடுபவர்களால் அந்தக் கோள்களின் செயல்பாட்டை எளிதாக சமாளிக்க இயலும். 

   சில சோதனைகள் நிரந்தரமானதாகவும் சில சோதனைகள் வந்து போவதாகவும் சில சோதனைகள் வடுவை உண்டாக்கிச்  செல்வதாகவும் சில சோதனைகள் அவமானத்தை தருகின்றதாகவும் இவ்வாறாக இவ்வாறாகப் பலவிதமான சோதனைகள் இந்தக் கோள்களினால் நடக்கின்றன .

 

       அவற்றுக்கெல்லாம் நாம் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எவற்றை எல்லாம் புறந்தள்ளி விட வேண்டும் என்பதெல்லாம் நாம் உணர்ந்து கொண்டுச் செயல்படுவது கூறியக் காலம் தான் பதஞ்சலி மகரிஷியின் போதனைகளை படிக்கின்றக் காலமாகும்.

 

                         சத்குரு பதஞ்சலி மகரிஷியின் திருவருள் பெற்றால் நாம் கோள்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆளாகாமல் அந்தக் கோள் நாயகர்களையும் வணங்கி அதே சமயத்தில் அந்த கோள்களை தூண்டி விடுகின்ற கர்மாக்களையும் உணர்ந்துகொள்ளமுடியும். யோகிகளாலும் ஞானிகளாலும் வருமுன் நடப்பவற்றை கூற முடியும் .

 

                            ஆனால் மனிதர்களுக்கு சில காரியங்கள் வரும் முன்பே தெரிந்து கொள்வதால் மிகுந்த துயரம் ஏற்படுகின்றது எனவே தான் இறைவன் அவற்றை எல்லாம் நாம் உணராதபடி செய்திருக்கின்றான் .

 

                            இந்த உலகில் உயர்ந்த எதையாவது சாதிப்பதற்கு பிரார்த்தனை மிகவும் அவசியமாகும். பிரார்த்தனைப் பூர்வ மனித வாழ்க்கைதான் மிகச் சிறந்ததாக இருக்கும் பிரார்த்தனை என்பது இறைவனிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் ஆகும். 

உணர்வுப்பூர்வமான கோரிக்கைகளுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 


                          இயற்கையை  நாடுகிற  பிரார்த்தனைகளும் இறைவன் துணையை நாடுகிற பிரார்த்தனைகளும் மிகச் சிறந்த பிரார்த்தனை ஆகும். இந்த உடலானது இயற்கையில் இருந்து  வந்ததால் இயற்கையோடு சம்பந்தப்பட்டிருப்பதாக இருப்பதால் 

          இயற்கையே! நீ இந்த உடலுக்கு ஒத்துழைப்பு கொடு என்று வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டும் .

   இறைவன் இருக்கின்றான் என்பது அனைவரும் அறிந்த உண்மை!  அருளாளர்கள் அவனை அடைய வழி சொல்லியிருக்கிறார்கள் யோகம் சொன்னார்கள் ,மந்திரம் சொன்னார்கள். 

 

   மேலும் இறைவனை அடைவதற்குரிய எத்தனை எத்தனையோ வழிமுறைகளை அவர்கள் சொல்லி இருந்தாலும் கூட அந்த வழியைப் பற்றி தெரிந்திருந்தாலும் கூட அந்த வழியில் செல்ல இயலவில்லை .ஆகவே அந்த வழியில் செல்லும் நிலையை எனக்கு கொடு என்று நாடி இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

 நம்முடைய பிரார்த்தனைகள் உண்மையாகவும், நியாயமாகவும் இருக்குமேயானால் அவை கண்டிப்பாக நிறைவேறும் .இறைவனையும் இயற்கையையும் நாம் நாடும்போது பிரார்த்தனை என்ற நம்பிக்கையும் உறுதியும் தான் அவற்றை அடைய துணை நிற்கும் . 

 

   இயற்கையை போற்ற வேண்டும். எதை நாம் நாடுகின்றோம் அதை கட்டாயம் போற்ற  வேண்டும் இறைவன் மீது நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் தவறு என்பதை ஒரு காலமும் செய்யாமலிருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கின்ற போது நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்துமே நிறைவேறிவிடும் . 

 

  அதுபோல இயற்கையை போற்றினால் இயற்கை நமக்கு பலன் தரும் அதனால்தான் மனிதர்கள் ஆதிகாலம் முதல் இன்றுவரை இயற்கையை வணங்குகிறார்கள் .

    அந்த இயற்கையின் சக்தியை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் சூரியன் சந்திரன் பூமி கடல் என அத்தனை இயற்கையையும் மனிதர்கள் வணங்கினார்கள்.

 

 
(தொடரும் )

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment