Saturday, August 15, 2009

மனித (மன ) அடையாளங்கள்

(thanks to www.palanitemples.com/)

சட்டம் என்பது மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கபடுவதுதான்.

சட்டத்தின் முன்னால் சமுதாயத்திற்கு முன்னால் ஒருவன் குற்றவாளியாக காணப்படுகிறான் என்றால் குற்றம் சுமத்தப்பெற்ற அவன் சில சமயங்களில் குற்றமற்ற நிராதிபதியாகவும் இருக்கின்றான் என்பதனால் சட்டமே மிக கவனம் கொண்டு தண்டனை வழங்குகிறது.  

இது ஒருபுறமிருக்க , மனிதன் என்றால் குற்றமியற்றக்கூடிய இயல்பைப்பெற்றவன் தான் என எந்த சாஸ்திரங்களும் கூறவில்லை மனிதர்களால் மட்டுமே குற்றம் செய்யாமல் தூயவனாக இருக்க இயலும் என்பதே மனிதனுடைய சிறப்புகளில் முதல் வரிசையில் வருகின்றது.

மற்ற உயிரிகளில் எல்லாம் சிறந்த மனித ஜீவிகள் அத்தகைய சிறப்புபெறுவதற்கு முக்கிய காரணியாக இருப்பதும், அவன் தடுமாற்றங்களில் சிக்கும்போது அவனை அதில் இருந்து வெளியில் கொண்டுவந்து அவனை உயர்த்துவது அவனிடமுள்ளதும் அவனைக்காப்பதும் ,எச்சரிப்பதும், அவனது மனசாட்சியே ஆகும். இந்த மனசாட்சிக்கு உதவும் வகையில் (அடிமைப்பட்டிருப்பினும், சுயமிழக்காத என்றும் அழியாத இறைக்கூறாய்) விளங்கும் அவனது ஆன்மாவும் சித்தமுமே அவனை வழி நடத்துகிறது எனலாம்.

மனிதனைத் தவிர மற்ற எந்த உயிரிகளுக்கும் மனம் என்ற ஒன்று இல்லை,
சித்தம் என்ற ஒன்று இல்லை.

அவைகளுக்கெல்லாம் பழக்கத்தினால் உருவான சிறிய அறிவு ஒன்று மட்டுமே அவைகளில் பதிந்து இருக்கும்படி அவைகள் இறைவனால் படைக்கப்பட்டன.

அதனால் அவைகள் உண்பதற்காகவோ, உறங்குவதற்காகவோ பாவச்செயல்கள் செய்வதில்லை.

ஆனால் மனிதனுக்கோ அறிவு, புத்தி, மனம் , சித்தம் ,இவை யாவும் ஒருங்கிணைந்து ஆன்ம ஞானம் என்ற பேரறிவும் கிடைக்கப் பெற்றவன் .

அதை வைத்து அவனாகவே சிந்தித்து அவனாகவே செயல்பட்டுக்கொள்ள இறைவன் ஏராளமான (வரையறுக்கப்படாத) சுதந்திரம் அளித்து விட்டான்.

இவர்களைக் கட்டுபடுத்துவதோ தண்டனையோ எதுவும் கொடுப்பதில்லை.

அவரவர்களாகவே தன்னைத் தானே ஆண்டுகொண்டு வினைகளைச் சேர்த்துக்கொண்டு அதற்கான பரிசினை அல்லது தண்டனையினை அவரவர்களே விரும்பியபடி அடைகிறான் அல்லது பெற்றுகொள்கிறான்
என்பதைத் தெளிவு படுத்துவதே வேதம்.

மேலும் இதில் இருந்து விடுபடவும் இறைவன் அளித்த சுயம் என்ற இறை ஆற்றலைப் பெற்றுக்கொள்ளவும் அதற்கான பேரறிவு (ஞானத்தை ) உணர்ந்து தன் வினைகளை , ஊழ் வழி துன்பத்தைக் களைந்து கொள்ளவும் மனிதன் தனக்குத் தானே பிறவி விலங்கிட்டு கொள்வதைச் சாபம் என்றோ தண்டனை என்றோ தவறாக புரிந்து கொள்ளும் அஞ்ஞானத்தைக் களைந்து கொள்ளவும் இந்த பாரதத்தில் ( ஞான பூமியில் ) பிறந்த நமக்கு பெருங்கருணை கொண்டு வழிகாட்டும் ஞான வள்ளல்கள்தான் ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களும் என்பதை மனிதர்கள் உணரவேண்டும்.

அவர்கள் மனித படைப்பின் ரகசியங்களை தங்களுடைய தவ வலிமையினால் மனிதர்களிடம் புதைந்து கிடக்கும் பேராற்றல்களை அணுஅணுவாக அறிந்து நமக்குச் சொல்லிச் சென்றார்கள் .

அவற்றில் முக்கியமாக மனித சுயம் கெட காரணமான முக்குண இயல்புகளும் , அந்த இயல்புகள் மனித வாழ்வில் அரங்கேற்ற துணை புரியும் ஐம்புலன் நுகர்ச்சிகளுமே என்பதை சித்த புருஷர்கள் விளக்கமாக வெளியிட்டார்கள்.  


ஏ ! மனிதா உனக்கும் , மற்ற ஏனைய உயிர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அல்லது சிறப்பு என்ன என்பதை நீ தெரிந்து கொண்டு விட்டால் நீயும் இறைத்தன்மை பெற்று உயர்ந்து விடுவாய்

என்ற உண்மையினை இவ்வுலகுக்கு அளித்து அருள் செய்தவர்களுள் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி தனது யோக சூத்திரத்தில் அட்டாங்க யோகத்தில் ஒரு யோக வேதத்தினையே உலகுக்கு அருளினார்.

மண்ணவர்க்கு மட்டுமின்றி விண்ணவர்க்கும் வழி காட்டிய அம்மகான் , சித்த புருஷர், அவதார புருஷர் , தேவர்க்கும் யாவர்க்கும் சற்குருவாய்த் திகழும் அவரது யோக தர்சனத்தை நாம் உணரும்படி 196 சூத்திரங்களில் உள்ள பல அரிய முக்கியமான விஷயங்களை அடியேனுக்கு அறிந்தவரை கூறக்கடமைப்பட்டுள்ளேன்.


வடமொழி மூலத்தில் இருப்பதைப் பல பெரியோர்கள், அருளாளர்கள், எத்தனை எத்தனையோ முற்கால,தற்கால பேரறிவாளர்கள், ஆன்மீகச் செம்மல்கள் தமிழ் உலகத்திற்குச் செம்மொழியால் வெளிப்படுத்தியுள்ளனர்.


அடியேன் முன் வழக்கில் உள்ள பல சொற்களை பயன்படுத்தியும், மொழிமாற்றம், சொல்லாக்கம் என்றில்லாத பழகு தமிழில் வரவிருக்கும் இந்தத் தொடருக்கு மெய்யன்பர்கள் ஆன்மீகவாதிகள், குற்றம் பொறுத்து வரவேற்பார்கள் என்று எண்ணுகிறேன்.


மனத்தினுள்ளே மருகிக்கொண்டு அல்லது மகிழ்ந்து கொண்டிருக்கும் அக எண்ணங்களை முகம் பிரதிபலித்து வெளிக்காட்டிவிடும் என முதுமொழியுண்டு. மனித மனத்தில் அவ்வப்போது தோன்றி மறையும் எண்ணங்களை ஓரளவு முகம் காட்டினாலும் ,
அது நிரந்தர முழு எண்ண வெளியீடு ஆகாது.


மனிதர்களுள் அன்பும் அறமும் , 
நிறைந்த மனத்தின் அமைதியினை வெளிக்காட்டும் குண இயல்புகளுள்ள சத்துவ குணம் படைத்த பிரிவினருக்கும் ,

தோற்றத்தில் அமைதி காட்டி  
மனத்தே அமைந்த எண்ணங்களைப் புறத்தே மாற்றிக்காட்டும் இயல்பு படைத்த ரஜோ குணப்பிரிவினரும்,

கண்களில் அமைதியின்றி வஞ்சகப்பார்வையும் , காமத்தை தூண்டும் கள்ளப் பேச்சும் சாதுர்ய நடவடிக்கைகளைக் கொண்டவர்களும் இந்த மூன்று வித பிரிவினரும் ,

முக்குணங்களின் கலப்பிலான பல்வகைச் சாராரும் மனிதர்களுள் இருக்கின்றனர். இவர்கள் ஏன் இவ்விதம் இருக்கின்றனர் ? இவர்களின் குண இயல்புகளில் இருந்து இவர்களை மாற்றுவது எப்படி? மாற்றுபவர் யார்? ஏன் மாற்ற வேண்டும் என்றெல்லாம் எந்த ஒருவரும் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு மனிதனும் இக்குணங்களை விரும்பியே ஏற்றிருக்கிறார்கள்.

அது அவர்களின் உரிமை. இறைவன் படைத்த இயற்கை மாளிகையில் இவர்கள் வரையும் கோலங்களும் அழகாய்த்தான் இருக்க முடியும் .

நாணயத்தின் இருபக்கங்கள் போல .
இறைவன் கொடுத்த சுதந்திரத்தின் பரிமாணப் பரிசு .  

ஒவ்வொரு தனி மனிதனும் "ஊழ்" இட்ட அடையாளக்குறி!

1 comment:

  1. Hello it's me, I am also visiting this web page on a regular basis, this site is really fastidious and the visitors are genuinely sharing pleasant thoughts.

    Also visit my website; palani hill temple

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment