Wednesday, August 5, 2009

பிராணாயாமம்(சித்தர்களின் கூற்று. )

ஆசிரியர் முன்னுரை "மெய்யன்பர்களே" பிராணாயாமம் தொடர் பார்க்க நீங்கள் எவ்வளவு ஆர்வத்தோடு இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகின்றது.

இடையே எனது முன்னுரை உங்களை கோபமூட்டும் எனவும் சிந்திக்க செய்கிறது.

எனினும் அடியேன் எனது சற்குருவிடம் அறிந்து கொண்டவற்றை பிறர்க்கு கூறும்போது ஓரளவு முழுமை பெற்றதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆர்வம்.


அதற்கான பொது விஷயங்கள் நிறைய இருப்பினும் சிலவற்றை உங்களுக்கு கூறியாக வேண்டும். எனவே தயவு செய்து சற்று பொறுமையாக படியுங்கள்.

யோக நெறி பயில இருப்பவர்களுக்கு முதலில் தேவையானதும் ,பயனளிக்க வல்லதும் பொறுமையே. சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் திருவருள் அனைவருக்கும் கிட்டுவதாக.


தமிழ் மொழி பார் முழுவதும் நிறைந்து பரவி நிற்கின்ற பாங்கில், அவ்வினிய மொழி நம் அனைவரையும் ஒன்று சேர்க்கிறது.


வடமொழி மூலத்திலுள்ள ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் ஒரு நூற்றித் தொன்னுற்றாறு யோக சூத்ரங்களையும் எல்லோரும் கற்றறிந்து, அதனுள் பொதிந்திருக்கும் , உண்மைகளை (விஞ்ஞான மய ,மெய் ஞானங்கள்) ஐ ப்பின்பற்றி தனி மனித ஒழுக்கங்களையும், இல்லற வாழ்க்கையிலே வாழ்ந்து கொண்டு தவ வாழ்க்கையினை, இயம -நியமத்துடன் பிணைந்த யோக நெறியினை நிதானமாகக்கற்று பதற்றமின்றி யோகக்கலையினை பழகி தொய்வற்ற நித்ய தொடர் பயிற்சிளைத் தொடர்ந்து மேற்கொள்வதால், இக வாழ்க்கையில் செம்மை பூண்டு பரவாழ்க்கைக்கு வித்திட வேண்டும்.



பலர் கூடி விவாதித்தலோ, வெறும் யந்திரப் பயிற்சியினாலோ, ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் யோக சூத்திரத்தை, யோக மதத்தை அறிந்து ஞானத்தின் முகவரியினை மட்டும் அறிந்து கொண்டதாக எண்ணுவது ஞானத்தின் முகவரியினை மட்டும் அறிந்தது போலாகும்.


மேலும் அதனால் எந்த பயனும் கிட்டாதென்பதே உண்மை.

மனம் ஒன்றிய பயிற்சி -பயிற்சி என்பதனால் மட்டுமே நம் ஆன்மாவை இறைவனோடு இணைக்கின்ற (ஆன்ம விடுதலை) முயற்சி பலிக்கும்.

"பழக்கத்தின் பலனாக வருவது அறிவு "
ஐம்புலன்களின் கலவை ஆதிக்க மேம்பாட்டால் வருவது புத்தி.

இவை முன் இரண்டாகிறது.


ஆழ்மனதொடர்பின் காரணமாக விளைந்து சித்தம் இறைக்கூறு, அல்லது இறைக்கரு என்பது ஆன்மா இவை பின் இரண்டாகிறது.

அதாவது முறையே அறிவு ,புத்தி இடையே மனம் ,சித்தம், ஆன்மா என இறைவனால் அமைக்கபட்டிருப்பதே நமது மனித இயந்திரத்தின் நுண்ணிய அழுத்தமான காரண ஊக்கிகளாய் மனிதனை செயல்படுத்துகிறது.

இச்செயல்பாட்டால் பயன்களில் விளைந்ததே கர்ம பலன்கள் இவைகள் பல்வேறு பிறவிகளின் மொத்த உருவே ஊழ் என்ற வினைப்பயன்களாய்
( நாமே நினைத்து, நாமே விரும்பி, நாமே ஆட்பட்டு) தேடிகொண்டவைகளின் பாவ, புண்ணிய தொகுப்புதான் ஊழ்வினை என்று பெயர் ஏற்கிறது.                   

பல கோடி பிறவிகளில் மொத்த வினைத்தொகுப்பு சஞ்சித கர்மா என்றும் அதிலிருந்து ஏதோ ஒரு பிறவிக்கு அனுபவ மற்றும் வினைகளை களையும் நிலை பிராப்த கர்மா ஆகும்.

இவைகளை சிறிதுசிறிதாய் கழிக்கவே நாம் பிறவி எடுக்கிறோம். பின் இறக்கிறோம் மீண்டும் பிறக்கிறோம். இந்த ஓயாத பணியினை தொடர்கின்ற நிலையில் இருந்து நமது ஆன்மாவிற்கு விடுதலை அளிப்பதே நடப்பு பிறப்பின் நாம் மேற்கொள்ளும் ஆன்மீக நோக்கமாகும்.

சரியை

கிரியை

ஞானம் 

யோகம்
என்ற பல்வேறு ஆன்மீக பாதைகள் இருப்பினும் உடனடியாகவும், நிச்சயமாகவும், பலன் கிடைக்க செய்வதே யோக மார்க்கம். ஆன்மா என்ற இறைகூற்றை உணரத்துவங்குபவர்கள் சாதரண மனிதர்களில் இருந்து வேறுபட்டவர்கள் ஆவார்கள்.  

மிக சாதாரண மனிதர்கள்

என்பவர்கள் இறை உணவற்று ஆன்ம விழிப்பில்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே யாவும் என எண்ணி வாழ்பவர்கள் ஆவார்கள் .

இறை உணர்வு பற்றுகிறவர்கள்

ஆன்மீக வாதிகளாகவும், இறை தன்மை உடையவர்களாகவும் ,உயர்ந்த பக்தி நிலை உடையவர்களாகவும் இறைக்கலப்பு நிலைக்கு வருகிறவர்கள் யோகநெறி வழி வந்தவர்களாகவும் இறைநிலை அடைந்தவர்கள் யோக நெறி அல்லது நிறை ஞானம் பெற்றவர்களாய் விளங்குகின்றனர்.


இவர்களே மனிதர்களுள் சிறந்தவர்களாக மாமனிதர்களாக , மகான்களாக , முனிவர்களாக , மஹரிஷிகளாக மாறி மனித சிறப்பினை மேம்படுத்துகிறார்கள் என்பதைவிட இறைவனாகவே மாறிவிடுகிறார்கள் என்பதே சித்தர்களின் கூற்று.

தொடரும்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment