Friday, September 28, 2018

இது பதஞ்சலி இட்ட கட்டளை

இது பதஞ்சலி இட்ட கட்டளை
அதுதான் நம் ஸ்வார்த்தம் சத்சங்கம் - 2

            அவ்வாறு எல்லாம் சொல்லி அதனுடைய துவக்கமும் பின்பு அதன் தொடர்ச்சியும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் மேலும் எத்தனையோ பிறவிகள் இதே சத்சங்கத்தை அவர்கள் நாடி வருவார்கள். அவர்கள் அதில் தான் இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் நமக்கு இப்போது புரியவில்லை. 
                                                                           
             நாம் யார்? முதலில் எங்கெல்லாம் இருந்தோம்? எப்படியெல்லாம் வாழ்ந்தோம்? இப்போது எப்படி இருக்கிறோம்? நாம் எப்படி எல்லாம் ஒன்றாக சேர்ந்தோம்? இது எல்லாம் பதஞ்சலி இட்ட கட்டளை. காலத்தில் அவர்கள் வருவார்கள் ஞானத்தை உணர்வதற்காக. காலமறிந்து வருவார்கள் என்று கூறி இருக்கிறார். அதுபோல அவரவர்கள் வருகிறார்கள். அவரவர்கள் சேர்ந்து கொள்கிறார்கள். அதுதான் இதில் மிகப் பெரிய விஷயம்.

                   அவர்களுக்கு எல்லாம் உடனே யோகம் கைகூடி விடுமா? ஞானம் கூடிவிடுமா? என்பதை எல்லாம் விட இவர்கள் மேன்மையடைந்து செல்கிறார்கள். சத்சங்கத்தினுடைய முதல் கட்டம் என்னவென்றால் ஒருவன் மிகவும் கடுமையானவனாக இருந்து பேசாமல் அங்கு அமர்பவர்களுடன் அமர்ந்து இவனும் சிந்திக்க துவங்குவான். சிந்திக்கத் துவங்குவதால் இவனுடைய எண்ணம் அவர்களுக்கும் அவர்களுடைய எண்ணம் இவனுக்கும் அந்தப் பரிமாற்றம் ஏற்பட்டு இவன் மேன்மை அடைந்து விடுகிறான். இதுதான் முக்கியமானது. 

               மனிதர்களுடைய உடற்கூறுகளிலேயே அந்த ஆதாரங்கள் உடைய அதிர்வு மையங்களால் அந்த அதிர்வு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் கிடைக்கக் கூடிய சக்தி சங்கத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும். அவர்கள் யாருமே தனியாக சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை. அது தானாகவே வந்துவிடும்.ஆகவே இப்படிப்பட்டவர்கள் அருகில் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் அவர்களை அறியாமலேயே அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அது அவர்களுக்குத் தெரியவில்லை. அதுதான் சங்கத்தின் மிகப்பெரிய மகிமை.
                    அதனால் உடனடியாக அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று சொன்னால் சம்சார பந்தம் விலகுகிறது. சம்சாரம் என்றால் ஒரு கடன் என்று சொல்வார்கள். சம்சாரம் என்றால் மனைவி என்ற பொருள் இங்கு இல்லை.இகவாழ்க்கைஅல்லது இல்லற வாழ்க்கையை சம்சார பந்தம் என்று சொல்கிறோம். இந்த இக வாழ்க்கை எவ்வளவு முக்கியமோ மனைவியும் அவ்வளவு முக்கியம் என்பதால் தான் அவர்களுக்கு சம்சாரம் என்று பெயர் வந்ததோ? வந்திருக்கலாம்.

                     சம்சார சாகரம் என்று சொன்னால் பிறந்து பிறந்து இந்த இல் வாழ்க்கைக்காக இவ்வுலகிலேயே மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து, உழன்று உழன்று, அந்த நிலைப்பாடு இந்த சத் சங்கத்தை நாடுபவர்களுக்கு அது தீர்ந்து விடும். குறைந்துவிடும்.
அதுமட்டுமல்லாமல் நல்லறிவு அவர்களுக்குப் பிரகாசிக்க துவங்கிவிடும். மற்றவர்களுக்கு எல்லாம் அவர்கள் 15 புத்தகங்கள் படித்திருக்கலாம். எத்தனையோ கோவில்களுக்கு சென்று இருக்கலாம். எத்தனையோ வேண்டுதல்கள் பரிகாரங்கள் செய்து இருக்கலாம். பல தீர்த்தங்கள் சென்றிருக்கலாம்.

                                என்றாலும் கூட அவைகளில் எல்லாம் கிடைக்காத மாறுதல்கள் இந்த சத் சங்கத்தை நாடியவுடன் அவர்களுக்கு வந்துவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே அந்த நல்லருள் பிரகாசிக்கத் துவங்கியவுடன் அவர்களுக்கு சொல்வதெல்லாம் அப்படியே சென்று அப்பி விடுகிறது. அப்பிவிடும் என்றால் கேட்பது,பதிவது எல்லாம் தாண்டி அப்படியே பிணைந்து விடுவதாகும். எந்த வார்த்தை சொன்னாலும் அவர்கள் மனதில் ஏறிவிடும்.

                 அதைப்பற்றி அவர்கள் அறியாமலே அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் நெஞ்சில் அப்படியே அது அப்பிவிடும். அல்லது பதிந்துவிடும். ஆகவே, இந்த சத்சங்கத்தை நாடுபவர்களுக்கு எத்தனையோ சத்சங்கங்கள் இந்த உலகில் இருக்கின்றன. அந்த சத்சங்கத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் இந்த பலன்கள் நிச்சயமாக ஏற்படும்.

ஆச்சாரியார் டி .எஸ் .கிருஷ்ணன்

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment