மனிதமும் சனாதனமும்
முக்தி அல்லது விடுதலை என்றால் பௌதீக உணர்வில் இருந்து சுதந்திரம் பெறுவதே ஆகும்.
அந்த உணர்வு என்பது யாது? அவ்வுணர்வு நான் இருக்கிறேன் என்பது. எனில் நான் என்பது யாது? களங்கப்பட்ட நிலையில் நான் காண்பது, துய்ப்பது, யாவும் என்னால் அடையப்படுகிறது என்பதாகும்.
இறைவனின் இந்த பிரபஞ்சத்தில் உறுப்பான ஜீவர்கள், ஆள்பவனுடன் இணைந்து செயல்படுபவர்களே.
உதாரணமாக – ஒரு இயந்திரத்தின் உறுப்பு, அந்த முழு இயந்திரத்துடன் இணைந்து செயல்படுகிறது. அது போல இவ்வுடலின் ஒரு அங்கம், இவ்வுடல் முழுவதுடனும் இணைந்து செயல்படுகிறது.
கை கால்கள், கண்கள் அனைத்துமே உடலின் பாகங்களே. அவை உண்மையில் ஆள்பவை அல்ல, வயிறு ஆள்கிறது. கால்கள் அசைகின்றன. கைகள் உணவை எடுத்து அளிக்க பற்கள் அரைக்க, உடல் ஜீரண உறுப்புகள் சகிதம் வயிற்றை திருப்தி செய்வதிலே ஈடுபடுகின்றன.
வேரில் நீருற்றுவதில் அத்தாவரம் வளம் பெறுவது என்பது போல், இறைவன் ஆள்பவன், ஆக்குகின்றவன்.
அவனைத் திருப்தி செய்ய ஒத்துழைக்க வேண்டியவர்களே நாம்
கைவிரல்கள் வயிற்றுக்கு உணவு அளிப்பதற்குப் பதில், விரல்களே உணவினை உட்கொள்ள வேண்டும் என நினைத்தால் அது ஏமாற்றமே அடையும்.
ஒரு சாதாரண மனிதனின் குணம் நிச்சயமாக தவறு செய்யக்கூடியதே. அது பெரும்பாலும் மதி மயங்கியே இருக்கின்றது. மற்றவரை ஏய்க்கும் குணமுடையதாலும், பக்குவமற்ற புலன்களால் கட்டுப்பட்ட ஒருவன் இறைவனை அணுகுதல் எளிதல்ல.
வேதம், வேதத்தின் சாராம்சமான (மனிதத்திற்காக) உபதேசித்த வேதம், பகவத்கீதை. இது தவிர அருளாளர்களால், ரிஷிகளால், சித்த புருஷர்களால், உபதேசிக்கப்பட்ட பல்வேறு வேத உபன்யாச விரிவுரைகள், அறிவுரைகள், யாவும் சனாதன தர்மத்தின் உண்மை வெளிப்பாடுகளேயன்றி வேறு எதுவும் இல்லை.
சனாதன தர்மம் ஒரு மதமல்ல. அனைத்து மதங்களில் ஆணி வேரென அவைகளில் ஆங்காங்கே காணப்படும் அரிய பெரிய நீதிகளையே அவைகள் புகழ்கின்றன. சனாதன தர்மத்தை என்னவேண்டுமானாலும் பெயரிட்டு அழைக்கலாம். காலமற்ற சனாதன தர்மத்தில் கூறப்படாதவைகள் என்பது எதுவும்இல்லை.
தனிமனிதர்களால் சில அருளாளர்களால், உருவாக்கிய கோட்பாடு, மார்க்கங்களில் இல்லாதவைகள் நமது சனாதன தர்மத்தில் உள்ளது. சனாதனம் அல்லாத மத நம்பிக்கைக்கு மனித சரித்திரத்தின் கால அட்டவணையில் ஏதாவது துவக்கம் இருக்கலாம்.
ஆனால் உயிர்களுடன் நிரந்தரமாக இருக்கும் சனாதன தர்மத்தின் சரித்திரத்திற்கு இது போன்ற ஆரம்பமே இல்லை.
சனாதன தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் இன வழியல்ல. நித்யமான கடவுளுடன், நித்யமான ஜீவர்களின், நித்யமான உறவின், நித்தியமான இயக்கமே ஆகும்.
ஸ்ரீ ராமனுஜ ஆச்சாரியர் அவர்களின் முடிவுக்கு ஏற்ப சனாதனம் என்ற சொல்லுக்கு ஆரம்பமும் முடிவும் அற்றது என்பதே. சனாதன தர்மம் முன்பே குறிப்பிட்டபடி ஜீவனின் நித்யமான கடமை ஆகும்.
நீரில் இருந்து திரவத்தன்மையினை பிரிக்க முடியாது.
நெருப்பில் இருந்து வெம்மையினையும், ஒளியினையும் எடுத்துவிட முடியாது என்பது போல,
ஆன்மாவின் நிரந்தர இயக்கத்தையும் அதனிடமிருந்து பிரித்துவிட முடியாது.
தர்மம் என்ற சொல் ஒரு பொருளுடன் நிரந்தரமாக இருக்கிறது என்பதே.
இது போன்று வாழும் உயிரின் முக்கியமான, இன்றியமையாத, அங்கத்தை எது என்று கண்டுபிடிக்க வேண்டும். வேதம் இதனை வெளிப்படுத்தியது. அது (இறைவன், கடவுள், பரமாத்மா, ஈஸ்வரன்) என்றெல்லாம் அதன் நிலையான துணை அவரது ஒரு அங்கமான நமக்கென்றும் இருக்க வேண்டும்.
எப்பிறப்பிலும் எந்நிலையிலும் அதுவே நம் அசைக்க முடியாத நம்பிக்கை எனக் கொள்ளல் வேண்டும்.
இறைவன் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் இறைவனை நாம்தான் (மனிதன்) கண்டுகொள்ள நம்மிடம் மட்டுமே உள்ள சிறப்பாற்றலால் முயன்று வெற்றி பெற வேண்டும். அதற்கு வழி பக்தியோ, நற்கருமமோ, யோகவழியோ, ஞானமார்க்கமோ எதுவாயினும் அவ்வழி நம்மை நிச்சயம் இறைவனிடம் கண்டிப்பாக கொண்டு சேர்க்கும் என நம்புவோம் நம்பிக்கை சனாதனத்தின் ஒரு அங்கம்.
(முற்றும் )
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
No comments:
Post a Comment