Saturday, November 27, 2010

ஞாயிறைப் போற்றுவோம் நலம் காண்போம் -1

 பதிப்பாளர் உரை

அன்புள்ள வலைப்பதிவுலக  ஆன்மீக உறவுகளை மற்றுமொரு கட்டுரையில் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.


நம் முன்னோர்களாகிய சித்தர்கள் , ரிஷிகள் , முனிவர்கள், மகான்கள், அருளாளர்கள் ,  நமக்கு அருளிச் சென்ற ஆன்மீகச்  செல்வத்தைப் போற்றி பாதுகாத்து முறையாகப் பயின்று நலம் காண்பது நமது கடமையாகிறது .அந்த வகையிலே  யோகம் என்ற அருட்ச் செல்வத்தை நமக்களித்த 
யோகத்தின் தலைமகன்  அருட் தந்தை யோக அவதாரம் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி  அவர்களின் திருவடி பற்றி அவர் இட்ட ஆணைப்படி அவர் அருளால் யோகம் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். இன்னும் அவர் அருளால் வெளிவரும்.


ஆசனங்களை முறையாகப் பயின்று நலம் பெற உடலாண்மையினை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலே  முந்தைய பதிவில் எலும்புகளை பற்றி சற்றே விரிவாகப் பார்த்திருந்தோம்.


வரும் பதிவுகளில் ஒவ்வொருவருக்கும்  ஆசனங்களை வரிசையாகக் கூறி அவற்றைச் செய்யும்போது எலும்புகளின் தன்மையினை விளக்க இருக்கிறோம்.  இப்போது ஆசனங்களில் முதன்மையாக விளங்கும் சூரிய நமஸ்காரத்தைப் பற்றி பார்ப்போம்.

யோக ஆசிரியர் உரை 

சூரிய நமஸ்காரம்

                                                                                   
இப்பரந்த பூமிக்கும், இதர பல கோள்களுக்கும் சூரியனே தலைக் கோளாக விளங்குகிறது. சூரியன் உலகிற்கு ஓளி தருவது மட்டுமில்லாமல் உணவிற்கு அடிப்படை சக்தி அளிப்பதாயினும் சூரியனே  உலகிற்கு தந்தையாகவும்  , நவக்கிரஹங்களின் தலைவனாகவும் , பஞ்ச பூத ( பஞ்ச பொருட்களின்  ) இதர நான்கு பொருட்களின் சூட்சம படைப்பாளியும் ஆவான்.
சூரியன், அருண் , பாஸ்கரன், மித்திரன், ரவி, ஆதித்யன், அர்கன்  என பலப்பல பெயர்களைக் கொண்ட சிறப்புகளை பெற்றவனும் ,சிவகருவின் தணலாக  நிற்பதும் சூரியனே .


மனிதனை ஏமாற்றும் புலன்களின் அறிவினை மிஞ்சிய ஞான அறிவினை உணர்த்தும் ஓளி வணக்கமே உயர்ந்தது என மந்திரங்களின் தாயான காயத்ரி மந்திரத்தின் உட்பொருளான  ஒளிக்கடவுளாக விளங்குபவனும் சூரியனே.


சொல்லி மாளாத புகழுக்குரிய சூரியனை வணங்கும் ஆசனமான சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தையே ஸ்வார்த்தம் சத் சங்கம்  மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின் உடலாசனப் பயிற்சிகளில் முதலாசனமாக இருக்கின்றது என்று அறிவிக்கிறது.


சூரிய நமஸ்காரம் 12 படிகளைக் கொண்டது. எனினும் அவைகள்  எழுவகை (7 ) ஆசனங்களால் அமைக்கப் பட்டதாகும்.

  1. நமஸ்கார விருக்ஷாசனம் ( 1 - 12  நிலைகள் )
  2. அர்த்த பிறையாசனம் ( 2 - 11 நிலைகள் )
  3. உத்ராசனம் (அல்லது ) பாத ஹச்தாசனம்  (3 -10  நிலைகள் )
  4. யோக தண்டாசனம் ( 4 -9 நிலைகள் )
  5. அதோ முக சவாசனம் ( 5 -8 )
  6. ஹ்ருதயாசனம் ( சாஷ்டாங்க நமஸ்காரம் ) ( 6 நிலை )
  7. புஜங்காசனம் ( 7 ம் நிலை )

சூரிய நமஸ்காரம்  செய்வதற்கு ஏற்ற காலம் 

சூரியன் அடிவானத்தில் முழுவது வந்தவுடனே துவங்குதலே சிறந்தது. 
உத்தராயண காலத்தில் பாதி உதித்தவுடன் துவங்குதலும், தட்சிணாயன  காலத்தில் முழுதும் உதித்த பின்னும் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த்தது என பெரியவர்கள் கூறுவார்கள். 


மூடுபனி காலம், மேக மூட்ட காலம் , போன்ற காலங்களில் சூரிய உதயம் மறைக்கப் பட்டிருப்பினும் சூரிய உதய நேரத்தைக் கணக்கிட்டு செய்ய  வேண்டும். இந்த காலங்களில் செய்யும் சூரிய நமஸ்காரம் மெத்தப் பயனளிக்க கூடியது. 

 சூரிய நமஸ்காரத்தின் போது கழுத்தில் எந்த வித உலோக ஆபரணங்களோ கைவிரல், மோதிரம், போன்றவைகளோ அணிதல் கூடாது. இறுக்கமான உடையினை தவிர்ப்பதோடு  மானம் காக்கும் சிறு உடை தவிர இதர பெரிய உடைகளை அணிவதும் கூடாது . மொத்தத்தில் உடல் முழுக்க சூரிய ஓளி எந்த அளவிற்கு அதிகமாக படர்கிறதோ அந்த அளவு பலன்  அதிகமாகும். 

யாரெல்லாம் சூரிய நமஸ்காரத்தை தவிர்க்க வேண்டும் ?

கண் நோய் அதிகமான அல்லது ஆழமான தலைப்புண், முதுகுத் தண்டுவட பாதிப்பு, இடுப்பெலும்பு பாதிப்பு, கைகால்கள் மூட்டு அழற்சி , குறைந்த மற்றும் அதிக இரத்தக் கோளாறு, இதய நோய் பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவைகள் உள்ளவர்கள் சூரிய நமஸ்காரத்தை நிச்சயம் தவிர்ப்பதே நல்லது. 


ஆனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, C O P D ,  உள்ளவர்களும் , முறைச்சுரம், மஞ்சள் காமாலை, முதலியவற்றினால் பாதிக்கப் பட்டு குணமானவர்களும் மற்றும் அறுவை சிகிச்சை  நிகழ்ந்து சில காலம் ஆனவர்களும் ஆசிரியரின் நேர்முக அறிவுரையின்படி சூரிய நமஸ்காரம் மேற்கொள்ளலாம்.சூரிய நமஸ்காரம் செய்முறை விளக்கத்தினை அடுத்த பதிவில் காணலாம். பதிவுக்கோர் காயத்ரி மந்திரம்
யோக அன்னை அவ்வை முனியினை போற்றும் காயத்ரி மந்திரம் ஓம் கணாபத்யாய வித்மஹே

குண்டலினியாய  தீமஹி

தந்நோ  அவ்வை  ப்ரசோதயாத்

                           
                                                                                (தொடரும் )

 

                                                                                                    

No comments:

Post a Comment

TRANSLATE