Saturday, January 30, 2010

பிரபஞ்சத்தின் காரணி பிராணன்

பிராணனே சகல உயிர்களுக்கும் பேசாத மந்திரமாக விளங்கி வருகிறது.

இது தொடர்பாக நாம் பிராணாயாம முறைகளை பல தலைப்புகளில் ஒன்றன் பின் ஒன்றாக பார்த்து வந்திருக்கிறோம். சுவாச சித்தி பெறுவதற்கு நாடி சுத்தி என்ற இடம், வலம் , மற்றும் வலம், இடம் என மாறி மாறி சுவாசங்களை இயக்கி வருகிறோம்

பிராணாயாமம் பழகுவதற்கு முதலில் ஒரு அறையினை அதற்கென தேர்வு செய்து கொள்வோம். .

அந்த அறை வடக்கு, வடகிழக்கு திசையில் அமைந்திருப்பின் மிக ஏற்றதாகும்


மேலும் அந்த அறையினுள் உறங்குவதோ, வேறு குடும்ப ,குடும்பமல்லாதவர்களுடைய எந்த ஒரு ஆலோசனை செயல்பாடுகள் தீர்மானித்தல் போன்ற காரியங்களை செய்யாதிருத்தல் வேண்டும்.


அந்த அறையினுள் நல்ல சூழலை ஏற்படுத்தும் வகையில் நாம் விரும்பி வணங்கும் தெய்வங்களின் படங்கள், மகான்களின் படங்கள், முதலியவற்றை வைத்து மணமுள்ள மலர்களாலும், தூப, தீப வழிபாடுகள் செய்வதற்கும் தகுந்த நிலையினை ஏற்படுத்துவது.


அங்கு செல்லும்போது நம் மனத்தை ஆசைகள், வெறுப்புகள் போன்ற எண்ண ஓட்டங்களை முழுதும் தவிர்த்து அன்பு, கருணை போன்ற நற்குண இயல்புகளை மேலோங்க செய்வது. அந்த அறையின் புனித தன்மையினை மேலும் வளப்படுத்தும்.


இது போன்ற ஒத்த மனம் அல்லாதவர்களை அந்த அறையினுள் பிரவேசிக்க அனுமதிக்க கூடாது.


அமரும் ஆசனம் , அமரும் இடம், பயிற்சி நேரம் இவைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளாமல் ஒரே நிலையில் இருத்தல் அவசியம்.


சுருங்ககூறின் இது போன்ற சூழலை ஏற்படுத்த அமைந்ததே ஆலயங்களும் , சத் சபைகளும் அக்காலத்தில் நிறுவப்பட்டிருந்தன.


இன்றைய கால கட்டத்தில் மேற்குறித்த சூழலை கோவில்களில் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.


தியான அறையில் நாம் புகும்போதும், வெளியேறும்போதும் சலனமற்ற மனதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். கலக்கமோ எப்போதாகினும் எதிர்பாராத , துன்பமோ ஏற்படுகையில் அந்த அறையினுள் நிலைப் படுத்தப்பட்டிருக்கும் தூய அதிர்வுகள் மனதை சரிப்படுத்தி அமைதியுறச் செய்யும். இதை நாம் நிரூபணமாக உணர முடியும்
மனம் ஒழுங்கு பெற மனதின் நுண்ணிய பார்வையால் ஆன்மாவை காண மூச்சினால் முடியும்

பிராணாயாமம் என்பது சுவாசத்தின் இயக்கம் மட்டுமே என்று நினைப்பது தவறாகும்.


பிராணாயாமத்திற்கும் சுவாசத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு என்றாலும் அது மிக குறைந்த அளவே. பிராணாயாமம் வெற்றி அடைய பல உத்திகளில் சுவாசமும் ஒன்று.

சுவாசத்தினை கட்டுபடுத்துதல் பிராணாயாமம் என்பதை விட நுரையீரல்களில் இயக்கத்தை கட்டுபடுத்துவதே பிராணாயாமம் எனலாம்.

நாம் விடும் மூச்சு நுரையீரலின் இயக்கத்தை உண்டாக்கவில்லை . மாறாக நுரையீரல்களின் இயக்கமே மூச்சை உண்டு பண்ணுகிறது

நுரையீரலை பிராணனே இயக்குகிறது. பிராணன் நுரையீரலை செயல்படுத்தும்போது பிராணக் காற்று உள்ளிழுக்கபடுவதும் வெளிவிடுவதும் நடைபெறுகின்றது .

நுரையீரல் என்ற கருவியினை இயக்கும் தசை, நரம்பு , ஆகியவைகளை நாம் கட்டுபடுத்த முடியுமானால் அதுவே நாம் பிராணனைக் கட்டுபடுத்துதலும் பிராணயாமம் செய்தலும் ஆகும்.

பிராணனும், பிராணக் காற்றும் ஒன்றை ஒன்று தழுவியவையே . இதில் இருந்தே இரண்டும் வெவ்வேறானது என அறியலாம்

மூச்சு இன்றி உயிர்) நிலைக்காது என்றால் யோகிகள் மூச்சு விடாமல் பல காலம் வாழ்ந்தும், தன் உடலை முழுதும் நீருக்குள்ளே, மண்ணுக்குள்ளோ , புதைத்துக் கொண்டு மூச்சற்று இருந்த போது உயிரோடு இருந்திருக்கிறார்கள் , எனின் பிராணனும் மூச்சும் வெவ்வேறானது என்பது உறுதியாகிறது

பிராணாயாமம் என்பது பின் எதுவாக இருக்க முடியும் ? பின் எதற்காக அதை செய்தல் வேண்டும் யோகத்திற்கு அது எந்த வகையில் பயன்படுகிறது என்பதை பின்னும் பார்ப்போம்.

நரம்புகளில் செல்லும் சக்தி பெருக்கினை புதுப்பாதையில் செலுத்த முயற்சி செய்வதும் பிராணாயாம உத்தி ஆகும்.

அவற்றை நரம்புகளில் பயணிக்கும் சக்திகள் எவ்விதமாக இயக்கமுறுகிறது எவ்விதமாக நாம் உணர்வது என்பதைத் துல்லியமாக கணிப்பதும் அவ்வாற்றலை ஒரு நிலைநோக்கோடு (Concentration) எவ்வாறு நம் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவது என்பது யோக பயிற்சியில் கண்டுகொள்ளக்கூடிய உண்மையாகும்.
அவ்விதமே நம் கட்டுபாட்டிற்குள் வசமாகிய நரம்பு உணர்வு சக்திகளை நமது உடலிலும் , உடலின் வெளியிலும் நாம் விரும்பியபடி செலுத்தும் முறை யோகத்தின் பிரதான அங்கமாகும்


மேற்கூறிய நரம்புகளின் வழியே பயணிக்கும் வழித் தடத்தினை (ராஜ பாட்டை) நீண்ட முதுகந்தண்டின் மையத் துளையே என ரிஷிகள் கண்டு போதிக்கின்றனர். அத்துளையின் மூலம் சுவாச நிசுவாசத்தின் மூலம் தூண்டப் பெற்ற சுழுமுனை நாடி மூலம் அபூர்வ சக்தி உடலிலும் , மனத்திலும் உடல் உணர்வை தாண்டிய “வெளி “ என்ற ஆகாசத்தையும் தொடர்புபடுத்தும் சக்தி மையங்களே ஆதாரங்கள் என்ற மடை வாசல்களாலும் ஆறு ஆதார மையங்களில் உணர்வினை கலப்பதும் அவ்விடங்களில் நின்றும் அங்கிருந்தபடி அண்டம், பிண்டம் (உடல், உலகு) இரண்டும் நம்மை தோற்றுவித்து தொடர்புறச் செய்யும் தந்திரமே யோகக் கலை.


மந்திரம் , தந்திரம் , எந்திரம் என முறையே மனதின் உள்ளாக பிராணனில் கலந்த ஆதார சக்கரங்களை சங்கமித்த ஊடகம் வாசிக்கலை.

இத்திறவுகோல் மூலம் இருவித இயக்கங்களை திறந்து பார்க்கவியலும் பௌதீக இயக்கம், பிராண இயக்கம் என இவ்விரண்டுமே “பிரபஞ்ச தோற்றுவாய்” ஆகும்.

பௌதீக இயக்கம் என்பது ஆகாசம், உருவாவதற்கு காரணியான, அணுக்கள் இயக்கமற்று, (சலனமற்று) நிர்ச்சலன அமைதியாக இருந்த போது, பௌதீக நிலையாகும்.

பிராண இயக்கம் என்பது நிர்ச்சலனமாய் இருந்த (ஒடுக்கத்தில் இருந்த) அணுப்பரிமாண உயிர் இயக்கங்களை மீண்டும் சலனப் படுத்தி உருவமற்று இருந்த பரமாணுக்களை கூட்டி பொருள் வடிவாய் ஆக்கியதும் பிராண இயக்கமே.


இவ்வாறு யாவற்றிலும் நீக்க மாற நிலைத்திலங்கும் பிராணனை (பிராண சக்தியினை) நாம் அறிந்துணர்ந்து அதன் வழி கலப்பது பிராணாயாம நெறி ஆகும்

-பிராணாயாமம் தொடரும்
.

2 comments:

  1. ஆஹா அற்புதம் இப்படிக்குwww.aanmigakkadal.blogspot.com

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment