Thursday, June 18, 2009

தெய்வீகஸ்தலம் கொண்ட குருவின் வரலாறு


மதுரை காளஹஸ்தி கோயில் மாநகரம் என்றழைக்கப்படும் மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் உள்ளது காசிவிஸ்வநாதர் கோயில். இங்கு இறைவன் வாயு ரூபத்தில் இருக்கிறார்.

அதற்கு சான்றாக காற்று புக முடியாமல் வடிவமைக்கப்பட்டுள்ள விசாலாட்சி அம்மன் கருவறைக்குள் உள்ள விளக்கு எப்போதும் அசைந்து கொண்டே இருக்கிறது.மனிதனுக்கு தேவையான நோயற்ற வாழ்க்கையும், ஞானமும், முக்தியும் இந்த தலத்திற்கு சென்று வழிபட்டால் கிடைத்து விடும். தல வரலாறு:

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணம் சிறப்பாக நடந்தது.


விஷ்ணு தாரை வார்த்து கொடுக்க பிரம்மா சிறப்பாக நடத்தி வைத்தார்.
இந்த தெய்வீக திருமணத்தை காண வந்தவர்களில் பதஞ்சலி மகரிஷியும், வியாக்ரபாதரும் அடங்குவர். இவர்கள் இருவரும் தினமும் சிதம்பரம் பொன்னம்பலத்தில் சிவனின் நடனத்தை பார்த்த பின் தான் உணவருந்துவதை கடமையாக கொண்டிருந்தனர்.

இப்போது மதுரையில் இருப்பதால், அவர்களது விருப்பப்படி வெள்ளியம்பலத்தை தோற்றுவித்து அதில் நடனமாடினார் சிவன்.


இந்த திருநடனத்தை தரிசித்தபின் தான் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சாப்பிட்டனர். பின்னர் பதஞ்சலி மகரிஷி ஒரு வில்வமரத்தின் கீழ் யோகத்தில் அமர்ந்தார்.

மதுரையை ஆண்ட சடையவர்ம விக்ரமபாண்டியன் இக்கோயிலைக் கட்டினான்.

முக்தி தரும் தெய்வமான காசி விஸ்வநாதரைத் தினமும் வழிபட வேண்டும் என்பது இவனது ஆசை. ஆனால், தினமும் காசி சென்று வழிபட இயலாதென்பதால், பதஞ்சலியின் யோக பீடத்தில் கோயில் கட்டி அதில் காசி விஸ்வநாதர்- விசாலாட்சியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு முக்தியடைந்தான். இங்கு விஸ்வநாதர் கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பொதுவாக பெரிய லிங்கங்களை நின்ற கோலம் என்றும், இதற்கடுத்த நிலையில் உள்ள லிங்கங்களை

அமர்ந்த கோலம் என்றும்,

சிறிய லிங்கங்களை கிடந்த கோலம் என்றும் சொல்வதுண்டு.


விசாலாட்சி: தல நாயகி விசாலாட்சி சிவனின் ஆவுடையார் மேல்,
தாமரை மலரில், ஷ்ரீசக்கரத்தில் நின்று அருள்பாலிப்பதால்  
முப்பீட நாயகி என அழைக்கப்படுகிறார்.

இவர்களை வழிபட்டால் இல்வாழ்க்கை சிறப்பாக அமையும். முக்தி கிடைக்கும்.

மதுரை காளஹஸ்தி: இத்தலத்தின் சிறப்பு பற்றி இங்குள்ள கிருஷ்ணன் கூறுகையில்,"காளஹஸ்தியில் இறைவன் வாயு உருவமாக இருக்கிறார். அதே போல் இங்கு அம்மனின் கருவறைக்குள் உள்ள விளக்கு எப்பொழுதும் அசைந்து கொண்டே இருக்கிறது.

ராகு கேதுவுக்கு அதிபதியான பதஞ்சலி மகரிஷி முக்கிய வழிபாட்டுத் தெய்வம்.

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவரை வணங்கினால் தோஷம் விலகுவதோடு திருமண தடையும் நீங்கும் என்பது நம்பிக்கை.
நீண்டகாலமாக பிரிந்து வாழும் தம்பதியினர் பதஞ்சலிக்கு மல்லிகை மாலை அணிந்து வழிபட்டால் சேர்ந்து விடுகிறார்கள்.

                                                  பதஞ்சலிக்கு துலாபாரம்' காணிக்கை செலுத்துவது விசேஷம்.

யோகம், தியானம் செய்ய விரும்புபவர்கள் இங்கு வந்து பதஞ்சலி அமர்ந்த வில்வ மரத்தின் கீழ் வடக்கு பார்த்து அமர்ந்து யோகாசனம் செய்தால்

மனம் தெளிவடையும்,

ஞான வேட்கை உண்டாகும்,

ஞாபக சக்தி பெருகும்,

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

இதற்காகவே இங்கு ஞாயிறுதோறும் மாலை வேளையில் யோகாசன வகுப்பு நடக்கிறது,"என்றார்.

சிவதட்சிணாமூர்த்தி: இங்கு சிவதட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.

புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க, முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபயமுத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல்கையில் நாகம், இடது மேல்கையில் அக்னி என சிவனே தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கனகதுர்க்கா: சாதாரணமாக கோயில்களில் சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை சன்னதி தான் இருக்கும். ஆனால், இங்கு கனக துர்க்கை அருள்பாலிக்கிறாள்.

செவ்வாய், வெள்ளி ராகு காலத்தில் மஞ்சள்நிற அரளியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

சூரிய பூஜை: முக்திதரும் காசிவிஸ்வநாதரை, சூரியபகவான் ஏப்ரல் 5 முதல் மே 5 வரை காலை 6.35 முதல் 7.15 வரையிலும், செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை காலை 6.40 முதல் 7.15 வரையிலும் தரிசிக்கிறார்.

நடை திறப்பு நேரம்: காலை 5.30- 8.30 வரையிலும், மாலை 6-8.30 வரையிலும் தரிசிக்கலாம்.

இருப்பிடம்: மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட் அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.

மதுரையின் அனைத்து பஸ் ஸ்டாண்ட்களிலிருந்தும் பழங்காநத்தத்திற்கு பஸ் வசதி உள்ளது.


2 comments:

  1. very superb and interesting news.

    ReplyDelete
  2. gud one and tanks for the information. im from madurai and visited palanganatham many times but this is the first hearing about this temple

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment