Sunday, January 20, 2013

ஆலயத்திற்கு வந்த சோதனையும் , அகன்றதால் வந்த நிம்மதியும்

சிவாலயப்பணி- அன்றும், இன்றும்,என்றென்றும் நிறைவுப்பகுதி இத்தொடரின் நிறைவுப் பகுதிக்கு வந்துவிட்டோம். என்றோ ஒருநாள் பதஞ்சலி மஹரிஷியை பற்றி அறிந்து கொண்டு இந்த தளத்திற்கும், ஆலயத்திற்கும்  வர இருப்பவர்களுக்கு வழியில் விளக்கொளியினைப் போல இந்த சிவாலயப் பணி தொடர் உதவும் என்றே நான் நினைக்கிறேன். 

 

எல்லாம் வல்ல சிவப் பரம்பொருள் அணுவிற்குள்ளும் பரமாணுவாய் எங்கும் நிறைந்தது. பிரபஞ்சத்தின்ஆரம்பமும் முடிவமுமாய் இறைவனே இருக்கிறான் . அவன் நீக்கமற எங்கும் நிறைந்தவன். 

அருளாளர்களின் தவத்திற்கு இரங்கி அவன் காட்சியை தாங்கள் பெற்ற அந்த இடங்களில் மக்களும் பயன்பெற ,அருள்பெற வேண்டித் தான் ஆலயங்கள் அரசர்களால் அமைக்கப் பட்டிருந்தது. எங்கெங்கும் இறைவன் நிறைந்திருந்தாலும் மகரிஷிகளின் பிரார்த்தனையினால் ஆலயங்களில் இறை சாந்நித்தியத்தை உணர முடிகிறது.

 

பொதுவாகவே அரசர்கள் ஆலயங்களை நிர்மாணிக்கும் பொழுது மிகப் பெரிய பரப்பளவில் தான் அதை அமைப்பார்கள். அதிலும் சோழ , பாண்டிய மன்னர்களைப் பற்றி கூறும்போது கேட்கவே வேண்டாம். பிரம்மாண்டமான அளவில் தான்  சிவாலயங்களை நிர்மாணிப்பார்கள்.  அந்த வகையிலே தான் காசி விஸ்வநாதர் ஆலயமும் பெரிய பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பரிவார தெய்வங்கள் முதல் அனைத்து மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்து வழிபடப் பட்டிருக்க வேண்டும் .   

ஆனால் இன்றைய நிலையில் காசி விஸ்வநாதரின் ஆலய பரப்பளவு மிகவும் குறுகிய அளவிலேயே அமைக்கப் பட்டிருக்கிறது . அதற்கு காரணம் சிதிலமடைந்த ஆலயத்தின் ஒரு பகுதிதான் சிவாலயப் பணி ஆரம்பமாகும்போது இருந்தது. ஆலயம் இருந்த அன்றைய ,இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் அதைச்சுற்றி நிறைய குடியிருப்புகளும் , மக்கள் பொதுவாக அதிகமாகப்  புழங்கும் நடைப் பகுதிகளுமாக இருந்தது.  மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்திக்கு  குறைவில்லை .

பல சோதனைகளை கடந்து ஆலயவழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தபோது ஒரு நீதிமன்ற ஆணையின் மூலம் ஒரு சோதனை வந்து சேர்ந்தது. அதாவது  2004 ஆம் ஆண்டு தமிழகமெங்கும் போக்குவரத்திற்கு மற்றும் புறம்போக்கு நிலங்களில் மற்றும் சாலைகளில் அமைக்கப் பட்டிருந்த ஆலயங்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத கட்டிடங்களை அகற்றுமாறு ஒரு பொது நல மனுவின் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

அந்த பொதுவான உத்தரவில் தமிழகமெங்கும் உள்ள சாலையோரம் மற்றும் பொதுவிடங்களில் அமைக்கப் பட்டிருந்த பல ஆலயங்கள் இடிபாட்டிற்கு உட்படும் நிலைக்கு தள்ளப் பட்டது.  அதன் தொடர்ச்சியாக பழங்காநத்தம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நமது ஆலயமும் இடிபடும் சூழ்நிலை ஏற்பட்டது 

இந்தசூழ்நிலையில் ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மூலமாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலயம் வரலாற்று ஆலயம் என்றும், அரசர்கள் பலரும் கொடை தந்துள்ளனர் என்றும் ,மேலும் பொதுவிடத்தில் இந்த ஆலயம் அமையவில்லை என்றும் 1947  ஆம் ஆண்டுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட எந்த ஆலயங்களையும் இடிக்க வேண்டாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினை உதாரணமாக சுட்டிக் காட்டி  நமது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

சில மாதங்களுக்கு பிறகு நமது ஆலயத்தினை இடிக்க வேண்டாம் என்று நமது மனுவின் மீது உயர்நீதிமன்றக் கிளையின் இறுதி தீர்ப்பு வந்தது.

தற்காலிகமாக நமது ஆலயத்திற்கு வந்த சோதனை நீங்கியது .

இறுதியாக இவ்வாறு பல தடைகளைக் கடந்து சிவாலயப் பணி இன்றும் தொடர்ந்து வருகிறது.  இந்த கட்டுரை வேண்டுமானால் இத்துடன் முடியலாம். பணி நிறைவு பெறும் நாள் தற்சமயம் வரப் போவதில்லை.

ஒரு பார்வையாளனாக இருந்து இந்த சம்பவங்களை பதிவு செய்ய எனக்கு  வாய்ப்பளித்த மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலிக்கும் , ஸ்வார்த்தம் சத்சங்கத்தினருக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குக்கிறேன்.

நன்றி  

இப்படிக்கு 

சிவ.உதயகுமார் 

No comments:

Post a Comment

TRANSLATE

Welcome To Pathanjali Website