Saturday, January 12, 2013

அரனார் கோவில் வாசமும் , அருட் குருவின் பாசமும் ( சித்தர்களின் ஜீவ நாடியில் நமது ஆலயம் )


சிவாலயப்பணி- அன்றும், இன்றும்,என்றென்றும் பகுதி - 8


காசி விஸ்வநாதர் திருக்கோவிலில்  குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வரை பதஞ்சலி இவ்வாலயத்தில் தவம் இயற்றினார் என்பதற்கான செவிவழிச் செய்திகளோ அல்லது கல்வெட்டு வரலாறுகளோ நம்மிடம் இருந்திருக்கவில்லை.

திருப்பணி தொடர்பாகவோ , ஆன்மீக உணர்வின் பொருட்டோ மகரிஷிகளின் ஜீவ நாடி அருள் வாக்கு கேட்பது என்பது மற்றும் அதன் வழி பணிகளை செம்மைப் படுத்துதல் என்பது நம் வழக்கம்.


அந்த வழியிலே குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளுக்கு ஒரு முன்னோட்டமாக பதஞ்சலி மஹரிஷி ஜீவ நாடி நூல் பார்க்கச் சென்றபோது அந்த வேளையில் தான் பதஞ்சலி மஹரிஷி பின்வருமாறு திருவாக்கு அருளினார்.


அதாவது வரலாற்றின் படி யாம் இவ்வாலயத்தில் தவம் புரிந்ததாகவும் ,  யோக சூத்திரம் , வியாகரண பாஷ்யம், சரகம், தமிழாய்வு,வான சாஸ்திரம் என்ற பல நூல்களை இயற்றியதாகவும், சிவ தரிசனத்தின் பொருட்டு பல காலம் தவம் இயற்றியதாகவும் என்று உரைத்தார். 

இந்த ஜீவ நாடி நூல் விளக்கத்திற்கு பிறகே பதஞ்சலி மஹரிஷி அங்கே அரூபமாய் இவ்வாலயத்தில் குடிகொண்டுள்ளார் என்பது நமக்கு தெரிய வந்தது.

பிரணவ ஞானப் பேரவை என்ற பெயரில் பதஞ்சலி மகரிஷியை வழிபட்டுக் கொண்டிருந்த ஆன்மீக சாதகர்களின் குழுவினருக்கு முன்னொரு காலத்தில் ஜீவ நாடியில் உரைத்த வழியின் படி அவர்கள் பதஞ்சலியை சுதை வடிவில் உருவம் சமைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் குழுவிலே குருஜியும் ஒரு அங்கத்தினராக இடம்பெற்றிருந்தார். 

                                                     சுதை வடிவம்  

ஜீவ நாடி, ஸ்வார்த்தம் சத்சங்கம்

இந்த வேளையில் தான் முதல் குடமுழுக்கு விழாவிற்காக ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் சார்பாக ஜீவ நாடி அருள் வாக்கு கேட்க சென்றிருந்த போது இந்த விஷயங்கள் எல்லாம் மகரிஷியால் நமக்கு தெளிவுபடுத்தப் பட்டது.

தற்போது உள்ள  சிலை வடிவம்

பின்பு அவரே தன் சுதை வடிவத்தை நமது சிவாலயத்தில் வைத்து வழிபடவேண்டும் என்று நமக்கு கட்டளையும் பிறப்பித்தார்.

ஜீவ நாடியில் அருள்வாக்கு

பழங்காநத்தம், காசி விஸ்வநாதர் திருக்கோவில்
ஜீவ நாடி


அதை தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு முதல் குட முழுக்கு விழாவினையொட்டி பதஞ்சலி மகரிஷியின் சுதை வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

ஏற்கனவே பதஞ்சலியை அருட்குருவாய் ஏற்றுக்கொண்டு அவரது வழியில் தொண்டாற்றிக் கொண்டிருந்த வேளையில் , நம் ஆலயத்தில் மீண்டும் குடிகொள்ள திருவுளம் கொண்ட சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் திருவடிகளை கோடி முறை துதித்தாலும் அவை போதாது.

ஜீவர்கள் பக்தித் தொண்டாற்றுவதே ஜீவர்களின் முக்திக்கு வழி என்கிறார் ஸ்ரீமத் ராமானுஜர்.

அந்த வகையிலே நான் பணி செய்கிறேன் என்ற அகங்கார வினையற்று மற்ற உயிர்களை எல்லாம் சம நோக்குடன் கண்டு பணிபுரிய வேண்டும். பணிவு என்பதே உன் அணிகலனாக இருக்க வேண்டும் என்பதே சத்குருவின் திரு உரு  நமக்கு உணர்த்தும் செய்தி. 


2002 ஆம் ஆண்டு வரை பதஞ்சலி மகரிஷியின் சுதை வடிவம் நமது ஆலயத்தில் வழிபடப் பெற்று பின்பு அதே இடத்தில் சத்குருவின் உத்தரவுப் படி சிலை வடிவம் நிறுவப்பட்டு இன்று வரை வழிபாடுகள் சொன்னவண்ணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யோகம் அருளும் ஜோதி வழிபாடு (பௌர்ணமி வழிபாடு )


நமது ஆலயத்தில் ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் குருவின் ஜென்ம நட்சத்திரமான மூல நட்சத்திர தினத்தில் பதஞ்சலி மகரிஷிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், முக்கியமாக ஜோதி வழிபாடும் நடைபெற்று வருகிறது .

இந்த ஜோதி வழிபாட்டினை நம் ஆலயத்தில் மேற்கொள்ளுமாறு காக புஜண்ட மஹரிஷியின் ஜீவ நாடியில் வாக்கு உரைத்தார். 


அதாவது ஜோதி வழிபாட்டில் தமக்கு காட்டப்படும் கற்பூர ஜோதியில் யாம் இருப்போம். அந்த வேளையில் யாம் எல்லாம் வல்ல சிவத்துடன் ஒன்றியிருப்போம். அந்த வேளையில் தன்னிடம் பக்தர்கள் வைக்கும் ஆன்ம நேய பிரார்த்தனைகளை யாம் நிறைவேற்றுவோம். என்றவாறு அந்த திருவாக்கு அருளப்பட்டிருந்தது. 

இந்த  ஜோதி வழிபாட்டில் கலந்து கொள்வதால் 

ஆத்ம சுத்தி மேவும்.
குறைவில்லா மேன்மை நிலவும்.
தீங்கு நிலை இல்லாமல் எண்ணிய காரியம் வெற்றி பெறும். 
என்றெல்லாம் அருள்வாக்கு உரைக்கப்பட்டது

  

அதன் வழியாக இன்று வரை அய்யாவிற்கு ஜோதி வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது . இந்த ஜோதி வழிபாட்டால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டு அருள் பெற்ற பக்தர்கள் ஏராளம். 


அந்த கால கட்டத்தில் பார்க்கப் பட்ட ஜீவ நாடிகளின் தொகுப்புகளில் சிலவற்றை மேலே இணைத்திருக்கிறோம் .  அவை தமிழார்வம் கொண்டவர்களுக்கு பொருள் விளங்கி இன்னும் சிறப்பாக இருக்கும். 


தொடரும்
சிவ.உதயக்குமார் 
No comments:

Post a Comment

TRANSLATE

Welcome To Pathanjali Website