சிவாலயப்பணி
-அன்றும்,இன்றும்,என்றென்றும்.பகுதி
- 5
இறுதியாக
ஞானம் மலர்கின்ற ஒவ்வொரு சாதகரின் வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்த களமாக ஆன்மீக
வரலாற்றின் பக்கங்களில் விவரிக்கப் படுகிறது. ஒவ்வொரு பிறவிகளிலும் மனிதன்
அனுபவிக்கின்ற நிகழ்வுகளுக்கு உட்பட்டு ஞானம் அடைகின்ற காலம் வாய்க்கிறது.
கன்மாவை அனுபவி.
ஆணவத்தை அழி
மாயையை விலக்கு
என்பதே முனிபுங்கவர்களின்
கொள்கையாகும். அந்த வழியிலே ஞானம் அடைகின்ற பாதை ,அடையப் படுகின்ற பாதை சீராக ,தெளிவாகவே
இருக்கிறது. ஆன்ம ஞானம் அடைகின்ற
சாதர்களுக்கு இப்பிரபஞ்சமே ஆன்மாவின் பிரதி பலிப்பாக தெரிவதால் புகழ்ச்சியும்,
இகழ்ச்சியும் ஒன்றாக தோன்றுகிறது.
எனவே இதுவரை தாங்கள் தர்மத்தின் பொருட்டு மேற்கொண்ட பணியால் விளைந்த
புண்ணியத்தையும் இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து நான் அல்ல ,எல்லாம் நீயே
என்ற சரணாகதி நிலைக்கு ஞானிகள் வந்துவிடுகின்றனர்.
தஞ்சை பெரிய கோவிலை பற்றி விவரிக்கும்போது எவ்வாறு மாமன்னர் ராஜ ராஜ சோழனைப்
பற்றி கூறாமல் இருக்க முடியாதே அதைப் போல நமது காசி விஸ்வநாதர் திருக்கோவிலை பற்றி
விவரிக்கும்போது கிருஷ்ணனைப் பற்றி சிறிது விவரித்தே ஆக வேண்டும். அந்த வகையிலே
தான் இதற்கு முன்புள்ள கட்டுரைகளில் கூட
அவரது குழந்தைப் பருவத்தை பற்றியும், அவரது தந்தையை பற்றியும் சிறிது விவரிக்க நேர்ந்தது. இந்த ஆலயத்தின்
பணியில் கிருஷ்ணனின் பங்கும் தவிர்க்க முடியாத ஒன்று.
பெரிய கோவிலைப் போன்று அளவில் வேண்டுமானால் நமது ஆலயம் பெரியதாக இல்லாமல்
இருக்கலாம். ஆனால் பக்தர்களுக்கு அருளுவதில் நமது ஆலயம் மற்றவர்களுக்கு சற்றும்
குறைந்ததல்ல .
மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரியது என்பார்கள் சான்றோர்கள்.
அந்த வகையிலே ஆலயத்தின் இறைவன் அய்யன் காசி விஸ்வநாதரும் –அன்னை காசி
விசாலாட்சியும் அன்பர்களுக்கு அருளை அள்ளித் தரும் அட்சய பாத்திரமாக இன்றும்
விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் .
கடலின் பரப்பை எவ்வாறு கைகளால் விளக்க முடியாதே அதே போன்று இறைவனின்
சிறப்பையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
நீக்க மற எங்கும், எவ்வுயிரிலும் சத் சித் ஆனந்த சொரூபியாய் இறைவன்
குடிகொண்டிருந்தாலும், இப்பரந்த பூவுலகின் சில இடங்களில் தான் அவனுடைய அருட்
கடாட்சம் பரவி நிற்கிறது. அவ்வாறு நிற்கக்
காரணம் என்னவென்றால் அது குருமார்களின் பிரார்த்தனையினால் மட்டுமே ஆகும்.
சத்குரு பதஞ்சலி மகரிஷி அவ்வாறு தவமியற்றி இறைக் காட்சி பெற்ற இடமே நமது ஆலயம்
என்பது முன்புள்ள கட்டுரைகளில் விளக்கப் பட்டுள்ளது .
வளமை ,வறுமை , இழப்பு என்ற வினைகள் காலத்திற்கேற்றவாறு மனித வாழ்க்கையில்
நிகழ்வதைப் போல கிருஷ்ணனின் வாழ்க்கையில் நிகழ்ந்தது. கல்விக்காக,
பிழைப்புக்காகவும் பல ஊர்கள் இடம் மாறி, அக்குடும்பம் இறுதியில் மதுரையம்பதி
வந்தடைந்தது.
உண்மை ஞானம் என்பது மனிதர்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவாய் காணக்கூடியது. சாதி,
இனம், மதம், மொழி, என்ற பேதங்களை விடுத்து அனைவரையும் வேறுபாடு நீங்கி அரவணைத்துக்
கொள்ளும். ஒரு சாதகன் ஞான வாயிலை மிதிக்கத் தொடங்கும்போதே இத்தகைய பண்புகள்
அவனிடம் குடிகொண்டிருக்கும்.
இன்றளவும் அத்தகைய பண்புகள் நமது கண்ணனிடம் இருப்பதால்தான் , மாற்று
இனத்தினரையும் பேதைமை விடுத்து , மகவாய்
அரவணைக்கும் குணம் இருக்கிறது.
நமது கன்மாவிக்கு ஏற்ப நம் விதி நம்மை வழி நடத்துகிறது
எந்த பணியினை ஒருவர் மேற்கொல்கிராரோ அதற்கு ஏற்ப அந்தப் பணியானது அவரது
கன்மாவை அனுசரித்து ஏற்றத் தாழ்வுகளை காண்கிறது.
தொன்று தொட்டு வந்த பாண்டிய மன்னர்களின் காலத்தில் சீரும் , சிறப்புடன்
விளங்கி வந்த நமது ஆலயம் காலம் செல்லச் செல்ல மிகவும் சிதிலம் அடைந்து கேட்பாரற்ற
நிலைக்கு வந்தது. பின்புவந்த தலைமுறைக்கும் அந்த ஆலயத்தை பற்றி சிறப்பித்துச்
சொல்ல பெரியோர்கள் இல்லாமல் போனதால்தான் இந்த நிலை நிகழ்ந்து வந்தது.
அரசர்கள் அனைவரும் இவ்வாலயத்திற்கு
பல்வேறு பூசைகளும் நிகழும் வண்ணம் நிலபுலன்களையும், வாரிசுதாரர் வழியாக பொறுப்பாளர்களையும் நியமித்து விட்டுச்
சென்றனர். அப்படி இருந்தும் இந்த நிலைக்கு ஆலயம் சென்றதற்கு வினைப் பயனோ அல்லது
அதை ஏற்று நடத்தியவர்களின் விதிப் பயனே என்று தெரியவில்லை.
அவ்வூரின் மையப் பகுதியில் அந்த ஆலயம் அமைந்திருந்தும் அதை மக்கள் கண்டு
கொள்ளாமல் விட்டதற்கு அறியாமை என்பதை தவிர வேறு என்ன காரணத்தை சொல்ல முடியும்.
பாம்புகளும், பல்லிகளும் குடிகொண்ட அந்த ஆலயத்திற்கு மக்கள் செல்லவே
அஞ்சினர். நித்தம் நித்தம் அந்த சுவற்றை
கரையான்கள் உணவாக அரித்தன.
பூர்வ ஜென்ம பந்தத்தால் உந்தப் பட்டு அதே பழங்காநத்தம் பகுதியில் வசித்த
கிருஷ்ணனுக்கு தன்னையும் அறியாமல் , அந்த ஆலயத்தின் மீது ஒரு அன்பு ஏற்பட்டது
. அந்த ஆலயத்தில் குடிகொண்ட இறைவனை வணங்க
வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினரை அன்புடன் துணைக்கு அழைத்தும் அவர்களின் உதவி என்பது
வார்த்தையில் கூட அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக வீண் முயற்சி என்ற வார்த்தைகள்
உதிக்கப் பட்டது.
சொல்லரித்த வார்த்தைகளும் ,செல்லரித்த சுவர்களும் தான் சிவாலயப் பணிக்கு ஆரம்ப முதலீடு.
அந்த ஊரின் பல முக்கியஸ்தர்களுடனும், பெரியவர்களாக கருதப் பட்டவர்களையும்
சந்திக்க காத்திருந்து ,நேரடியாக அணுகியும் அதற்கு உடன்பாடு இல்லாமல் அந்தப்
பொறுப்பினை தட்டிக்கழிக்கும் வகையில் தங்கள் இயல்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
அயலூரில் இருந்து வந்த ஒருவர் நம்மூரில் சிதிலமடைந்த ஆலயத்தை எடுத்துக்
கட்டுவதா, நம்மை வந்தடைய வேண்டிய பெருமை பிறரைச் சேர்வதா ? என்றெல்லாம் மனித மனம்
குறுக்கு சால் ஒட்டிக்கொண்டிருந்தது.
சிவனுடைய ஆலயத்தை புதுப்பிப்பது என்பது மிகவும் அபாயகரமான விஷயம்.ஏன்
உயிருக்கே உலைவைக்கும் இந்த வீண் வேலை உமக்கெதற்கு ? என்று பூர்வ இனத்தாரின் மூட
நம்பிக்கை கலந்த எச்சரிக்கை ஒரு பக்கம்.
ஒவ்வொரு பிறவிகளிலும் நிகழ்கின்ற அனுபவத்தால் மனித மனம் முன்னேறுமே தவிர,
ஞானிகளின் அடி பற்றி தர்மத்தின் வழி நிற்கும் பாக்கியம் பெரும்பாலோனருக்கு
கிடைப்பதில்லை. நல்லவர்கள் நம்மைச் சுற்றி
இருந்தாலும் நமது ஆழ்ந்த தேடல் இல்லாமல்
கன்மா மனிதர்களின் கண்ணை மறைக்கிறது.
அகங்காரத்தின் விளைவாக
நல்லவர்களையும், தீயவர்களையும் ஒரு சேர பார்க்கும் மனோ நிலை மனிதனுக்கு
இயல்பாக வந்தமைகிறது.
தர்மம் என்பது மனித மனத்தின் இயல்பாக இருக்க வேண்டும்.
வேறுபாடுகள் அற்று சமத்துவ சமுதாயம் படைக்க
வேண்டும் என்பதை ஞானிகளின் நோக்கம்.
எங்கே அஞ்ஞானம் இருக்கிறதோ அங்கேதான் ஞானத்தின் தேவை அதிகரிக்கிறது.
அனைவரையும் இணைத்து தான் ஒரு சத் காரியத்தை செய்ய வேண்டும் என்பதுதான்
கிருஷ்ணனின் எண்ணமும் ,அதுதான் முறையும் கூட.
பண்புகளால் முழுமையான மனிதத்துவம் பெற்ற ஒருவரால் , விலங்கு நிலை மனோபாவம்
கொண்ட மனிதர்களை சமாளிப்பது ஒரு கலை என்று கூட கூறலாம்.
ஆதரவு வேண்டி நின்ற இதயத்திற்கு கரங்கள் கோர்த்து ஆதரவு அளிக்க வேண்டியதல்லவா
முறையான செயல்பாடு. அதைவிடுத்து இந்த வெறுப்புகளையும் ,மிரட்டல்களையும் , எவ்வாறு எடுத்துக் கொள்வது ??????
தொடரும்
சிவ.உதயக் குமார்
No comments:
Post a Comment