Wednesday, November 14, 2012

சிவாலயப்பணி -அன்றும்,இன்றும்,என்றென்றும்.பகுதி - 4


சிவாலயப்பணி -அன்றும்,இன்றும்,என்றென்றும்.பகுதி -

சத்குருவின் அறிமுகம்
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே
மன்னனாம் ஆதி சேஷனின் இடம் அமர்ந்த   மங்கையற்ச்  சுடரே
ஈகையுடன் அன்பளிக்கும் தெய்வீக மலரே “ பாரதியே  
எம் அன்னையே உம் பாதம் பணிகிறேன்......... 
அறியாத மழலை வயதிலும் நமக்கு ஆன்றோர்களால் அற்புதமான விஷயங்கள் போதிக்கப்படுகின்றன. நல்லொழுக்கமும் , நற்செயலும் பிறவற்றைப் போல நம் மனத்தே பதிகின்றன.  

பசுமரத்தாணி போல என்பார்கள் பெரியவர்கள். 

நம் முன்னால் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அந்த அறியா வயதிலும் நம் மனத்தில் ஆழமாக பதிந்து விடுகின்றன.  அதனால் தான் என்னவோ  நம் பரத கண்டத்தில் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையில் குருகுலங்கள் அன்றைய கால கட்டத்தில் மலர்ந்து நின்றன. 

ஒருவருக்கு முதல் குரு அவன்/அவளுடைய  தந்தை என்பார்கள் சான்றோர்கள். 

ஒவ்வொரு தந்தையும் தனது வருங்கால சந்ததிகளுக்காகவாவது நன்னெறிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமாக இருந்தது.  நன்னெறிகளை பழகி அதன் வழி நிற்றல் என்பது வலியவர்க்கும் , எளியவர்க்கும் பொதுவான ஒன்று.


தாங்கள் யுக தர்மங்களை கற்று அதன் வழி நின்று வாழ்வினை காண்பது போல தங்களுடைய மழலைச் செல்வங்களும்  , அந்த தர்மத்தைப் போதிக்கும் கல்வியினை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலே குருகுலங்களுக்கு தம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர் பெற்றோர்கள் .


அந்தக் குருகுல கல்வி முறையில்  குருகுலத்தில் குருவுடன் குறிப்பிட்ட காலம் தங்கி, அவரையே தாயாக , தந்தையாக போற்றி விஞ்ஞானம் முதல் மெய்ஞானம்  வரை அனைத்துக் கலைகளையும் கற்று அவர்கள் அந்த குருகுலக்கல்வியினை பூர்த்தி செய்து வரும்போது ஒரு மானுடத்துவம் பெற்று விடுவார்கள். 


அத்தகைய கால கட்டத்தை நாம் தாண்டி ஓர் நூற்றாண்டாகி விட்ட போதிலும் அதன் வழி சற்றும் தவறாத வகையில், சில மாற்றங்களைக் கொண்டு அதே உயர்ந்த நோக்கைக் கொண்டு சத்சங்கங்கள் செயல்படுகின்றன. அந்த குருகுலக் கல்வி முறை இல்லாத குறையினை பூர்த்தி செய்கின்றன.

கண்ணனுக்கும் அத்தகைய குருகுலக் கல்வி முறையானது அவனது இல்லத்தில் இருந்தே மலர்ந்தது.  அறியாத வயதில் சில காலமே அவருடன் இருக்க நேரிட்டாலும், அவன் பின்பற்றி நிற்க  வேண்டிய    வழிமுறைகள் அய்யா சுப்ரமணியத்தால் கற்றுத் தரப்பட்டன. 


ஓம்
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய  கேன !
  யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
      பதஞ்சலீம்  ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!பாடலின் விளக்கம் -  “நான் கரம் குவித்துப் பதஞ்சலியை வணங்குகிறேன். அவர் முனிவர்களுள் புகழ் பெற்றவர். மனத்தின் அழுக்கினை  யோக சாஸ்த்திரத்தினாலும், வாக்கினை இலக்கண சாஸ்த்திரத்தினாலும், உடம்பினை ஆயுர்வேததினாலும் அவர் தூய்மைப் படுத்தினார் .”


மேற்கண்ட பாடலை அஷ்டாங்க யோக வழி நிற்கும் மாணவர்கள் அனைவரும் பதஞ்சலியை நோக்கிப் பிரார்த்தித்து தங்கள் பயிற்சியினை துவக்குவார்கள். இந்தப் பாடலே அவனுக்கும் முதல் பாடமாய் தந்தையால் கற்றுத் தரப்பட்டது . இதுவே இந்தப் பிறவியில் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் அறிமுகமாக மலர்ந்தது.
கண்டிப்பு , கருணை என்ற இரு வழிகளாலும், தந்தை ,குரு என்ற இரு முகங்களாலும் ஆன்ம பாடங்கள் போதிக்கப் பட்டன.


வளமைக்குப்பிறகு வறுமை !
ஆன்ம சாதகர்கள் தங்கள் வாழ்க்கையில் இருமைத் தத்துவத்தின் படி  தங்கள் வாழ்க்கையில் வறுமை,வளமை என்ற இரு அனுபவங்களையும் ஒரு சேரப் பெற்று விடுகின்றனர். ஏன் ஒருவேளை உணவிற்கே அல்லாடும் அந்த துயரக் காட்சி ஏறக்குறைய எல்லா ஆன்ம சாதகர்களின் வாழ்விலும்  நிகழ்ந்து விடுகின்றது.  

 பண்பாடற்ற மனிதர்கள் இந்த துயரங்களைக் கடக்க முடியாமல் ,மாயையின் வலைகளில் வீழ்ந்து விடுகின்றனர். ஆனால் ஆன்ம சாதகர்களோ தங்களின் சத்திய நிஷ்டையால் அத்தகைய சோதனைகளைக் கடந்து விடுகின்றனர்.  எனவே தான் தங்கள் சிஷ்யப் பிள்ளைகள் அத்தகைய சத்திய சோதனையில் சிக்கும்போது , குருமார்களின்  அருட் கரங்களால் காப்பாற்றப் படுகின்றனர். 
 
அன்புத் தந்தையின் மறைவிற்குப் பிறகு அந்தக் குடும்பத்தை வறுமை தன் கோரக் கரங்களுக்குள் தத்தெடுத்துக் கொண்டது . பல வயிறுகளுக்கு போதுமென்ற அளவுக்கு பரிமாறிய கரங்கள் , ஒருவேளை உணவினைப் பற்றி நிற்கும் நிலைக்கு வந்தது.  


(வரலாறு தொடரும் )
சிவ.உதயகுமார்


No comments:

Post a Comment

TRANSLATE

Welcome To Pathanjali Website