Sunday, September 2, 2012

சிவாலயப்பணி - அன்றும்,இன்றும், என்றென்றும் ......... பகுதி - 2


சிவாலயப்பணி - அன்றும்,இன்றும், என்றென்றும் ......... பகுதி - 2

vikirama pandiyan, palanganatham, madurai, sivan temple, patanjali
thanks to thevarthalam.blogspot.com
பாண்டிய பேரரசர்களின் வாரிசுகளில் பலர்   தங்கள்  ஆட்சி காலத்தில் அருள்மிகு மீனாக்ஷி –சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு பணி செய்துள்ளார்கள். இன்னும் சில அரசர்கள் பெரிய கோவில் மட்டுமல்லாது சான்றோர்கள் , ரிஷிகள் கட்டளைப் படி பல  ஆலயங்களை நிர்மாணித்தும் , புனரமைப்பு பணிகள் செய்தும் உள்ளனர். அந்த வகையில் மாமன்னர் சடைய வர்ம விக்கிரம பாண்டியனும் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலை அமைத்தார் . அவர் நிர்மாணித்த ஆலயங்களுள் இந்த ஆலயம் முதலாவதாகும். 


மீனாக்ஷி –சுந்தரேஸ்வரர் திருமணத்திற்காக மதுரையம்பதிக்கு இமயத்திலும், வேறு எங்கிலும் இருந்து பலப்பல ரிஷிகள், முனிவர்கள், சான்றோர்கள் ,தேவர்கள் வந்திருந்து சிறப்பித்தனர். அந்த வகையிலே வந்த முனிபுங்கவர்களில் பதஞ்சலி மகரிஷியும் , வியாக்ர பாதரும் குறிப்பிடத்தக்கவராவார்கள்.


 பதஞ்சலி மகரிஷியும் , வியாக்ர பாதரும் தினமும் சிதம்பரம் பொன்னம்பலத்தில் சிவனின் நடனத்தை பார்த்த பின் தான் உணவருந்துவதை கடமையாக கொண்டிருந்தனர்.இப்போது மதுரையில் இருப்பதால், அவர்களது விருப்பப்படி வெள்ளியம்பலத்தை தோற்றுவித்து அதில் நடனமாடினார் சிவன்.

இந்த திருநடனத்தை தரிசித்தபின் தான் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சாப்பிட்டனர். பின்னர் பதஞ்சலி மகரிஷி ஒரு வில்வமரத்தின் கீழ் யோகத்தில் அமர்ந்தார். அதன் பிறகு அந்த இடம் பதஞ்சலி யோக பீடம் என்று சான்றோர்களால் அறியப் பெற்றது. பதஞ்சலி தவம் செய்த சிறப்புப் பெற்ற இடங்களில் இதுவும் ஒன்று.


சிவாலயப் பணியும் , பக்தியும் பரம்பரை பரம்பரையாக  பாண்டிய மன்னர்களின் குல தர்மம் என்றானது. 


முக்தி தரும் தெய்வமான காசி விஸ்வநாதரைத் தினமும் வழிபட வேண்டும் என்பது  விக்கிரம பாண்டியனது ஆசை. மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி சந்நிதியை நிறுவி வழிபட்டார். இந்நிலையில் அவருக்கு காட்சி அருளிய பதஞ்சலி மஹரிஷி தான் தவம் செய்த இடத்தில் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி ஆலயத்தை அமைக்குமாறு உத்தரவிட்டார். அன்று அவர் தவம் செய்ததாக அறியப்பட்ட பழங்காநத்தம் எனும் பகுதியானது மணல்,கல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. மக்கள் வாழ்வதற்கான சமதளப் பகுதியாக அது இல்லை. 


அந்த உத்தரவினை சிரமேற்கொண்டு பதஞ்சலியின் யோக பீடத்தில் மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மன் சந்நிதி உள்ளதைப் போன்று மறு பதிப்பாக அதைப் போன்ற ஆலயத்தை இங்கே கட்டினார். 


சடைய வர்ம விக்கிரம பாண்டியன் கோயில் கட்டி அதில் காசி விஸ்வநாதர்- விசாலாட்சியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு முக்தியடைந்தான். அந்த ஆலயத்திற்கு தொடர் வழிபாடுகள் நடைபெறும் வண்ணம் அந்த கோவிலுக்கு என்று பல விஷயங்களை தானமாக வழங்கினான். தனக்கு பின்னர் வரும் வாரிசுகளும் அவ்வாறே செய்யுமாறு பணித்தான். 


அவர் காலத்திற்கு பிறகும் அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. 


காலங்கள் உருண்டோடின. ஆட்சிகள் மாறியது. காட்சிகளும் மாறின. மலை மேடு பகுதிகள் எல்லாம் விளை நிலங்கள் ஆகின. பின் விளை நிலங்கள் எல்லாம் வீடுகள் ஆகின. 


பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் ஆலய வழிபாடுகள் தொடர்ந்தன.ஆங்கிலேயர் ஆட்சி மலர்ந்தது. மேகங்கள் சூரியனை மறைப்பது போல சில சுயமிகளின் சுயநலம் காரணமாக கால ஓட்டத்தில் ஆலயம் புனரமைப்பு செய்யப்படாமல்  பொலிவிழந்தது .  


மக்கள் கூடி நின்று வழிபாடு செய்ய வேண்டிய ஆலயத்தில் சிலந்திகள் தான் கூடு கட்டின.  கால ஓட்டத்தில் மக்களிடையே ஆன்மீக உணர்வு குன்றக் குன்ற இங்கே அப்படி ஒரு ஆலயம் இருந்தது என்றும், பின்வந்த தலை முறைக்கும் இங்கே ஒரு சிறப்பு குடி கொண்டுள்ளது என்று தெரியாமல் போனது. இதுவும் இறைவனின் சித்தமோ ?

(ஆதாரம் - மதுரை வரலாறு நூல் )
                                                                             


வரலாறு தொடரும் ............
   இப்படிக்கு 
சிவ. உதயகுமார் 


No comments:

Post a Comment

TRANSLATE

Welcome To Pathanjali Website